இன்றைய வசனம் :-மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள். ரோமர் 8:14

சீஷத்துவம் 1


              சீஷத்துவம்

1. சீஷத்துவத்தின் நிபந்தனைகள்

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு முழுவதும் ஒப்புக்கொடுப்பதே மெய் கிறிஸ்தவம்.

ஈடுபடுவதற்கு வேறொன்றும் இல்லாத மாலை வேளையையோ, அல்லது வாரத்தின் இறுதியையோ, அல்லது வேலையின்று ஓய்வு பெற்ற ஆண்டுகளையோ தமக்குத் தருகிற மக்களை இரட்சகர் எதிர்பார்த்துக்கொண்டிருக்கவில்லை
. தங்கள் வாழ்க்கையில் அவருக்கு முதலிடம் கொடுப்போரையே அவர் தேடுகிறார். அவருடைய வழியில் ஒரு நோக்கமுமின்றி கூட்டத்தோடு கூட்டமாகச் சென்று கொண்டிருப்போரை அவர் தேடவில்லை. தங்களுக்கு முன்னே அவர் நடந்த சுயவெறுப்பின் பாதையில் நடக்க மனமுள்ளோரே அவருக்கு வேண்டும் என்ற உணர்வினின்று எழுகின்று மாளா நட்பினைக் கொண்ட தனித்தனி ஆண்களையும், பெண்களையுமே அவர் எப்போதும் தேடினார். இப்போதும் தேடுகிறார் என்று இவான் ஹாப்கின்ஸ் என்பார் கூறினார்.

நிபந்தனையற்ற ஒப்புக்கொடுத்தலே அவர் கல்வாரியில் செலுத்திய பலிக்குத் தக்கவிதத்தில் இணங்குவதாகும். வியப்பில் ஆழ்த்தும் அன்பு, தெய்வீக அன்பு நம் ஆன்மாவையும், நம் வாழ்க்கையையும், நமக்குள்ள எல்லாவற்றையுமே அர்ப்பணிக்க அறைகூவல் விடுக்கிறது. இத்தகைய சமர்ப்பணத்திற்குக் குறைந்த எதுவும் அந்த அன்பைத்திருப்தியாக்காது.

கர்த்தராகிய இயேசு தமக்குச் சீஷராக ஆசைப்பட்டோர் பேரில் சில கண்டிப்பான நிபந்தனைகளை விதித்தார். அவர்கள் நிறைவேற்ற வேண்டுமென்று அவர் வலியுறுத்தினவையெல்லாம் சொகுசான வாழ்க்கை நடத்துக் இக்காலத்தில் கவனம் பெறவில்லை. நரகத்திலிருந்து தப்பும் வழியாகவும், பரலோகத்தை அடையும் உறுதியாகவுமே கிறிஸ்தவம் நமக்கு அடிக்கடி தோற்றமளிக்கிறது. அந்த உறுதியை அடைவதோடுகூட, இவ்வுலக வாழ்க்கை நல்கக்கூடிய மிகச் சிறந்ததை நுகர எல்லா உரிமையும் நமக்கு உண்டு என்று நாம் நினைக்கிறோம். சீஷத்துவத்தைப்பற்றித் நமக்குத் தெரியும், ஆனால் கிறிஸ்தவம் எப்படிப்பட்டதாயிருக்க வேண்டும் என்று நாம் நினைக்கிறோமோ அந்த எண்ணத்தோடு அவ்வாக்கியங்களை இணைப்பது நமக்குக் கடினமாயிருக்கிறது.

நாட்டுப்பற்றின் காரணமாக வீரர்கள் தங்கள் உயிரை விடுகிறனர். இவ்வுண்மையை நாம் ஏற்கிறோம். அரசியல் காரணங்களுக்காகப் பொதுவுடைமைக் கட்சியினர் சாகவும் ஒப்புக்கொடுக்கின்றனர். இதை வினோதமானதொன்றாக நாம் கருதுவதில்லை. ஆனால் உதிரமும் வேர்வையும் கண்ணீரும் கிறிஸ்துவைப் பின்பற்றும் ஒருவனின் வாழ்க்கையில் இடம்பெற்று விளங்க வேண்டியவை என்று கூற்று எப்படியோ வெகு தொலைவில் உள்ள தொன்றாகவும், அறிய முடியாத புதிராகவும் காணப்படுகிறது.

அப்படியிருந்தாலும் கர்த்தராகிய இயேசுவின் சொற்கள் மிகத் தெளிவானவை. அவற்றை அப்படியே ஒப்புக்கொண்டால் தப்பெண்ணத்திற்கு இடமே இல்லை. உலக இரட்சகர் விதித்த சீஷத்துவத்தின் நிபந்தனைகளாவன.

1. இயேசு கிறிஸ்துவின் பால் மிக உயர்ந்த அன்பு

யாதொருவன் என்னிடத்தில் வந்து, தன் தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரரையும், சகோதரிகளையும், தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்குச் சீஷனாயிருக்க மாட்டான் (லூக்கா. 14:26). நம் உறவின்பால் வெறுப்புணர்ச்சி நம் உள்ளத்தில் எப்போதும் குடிகொண்டிருக்க வேண்டும் என்பது இதன் பொருள் அல்ல. கிறிஸ்துவின்மேல் நாம் செலுத்தும் மிகப்பெரிய அன்போடு ஒப்பிடும்போது பிறர் மீது நாம் செலுத்தும் அன்பு வெறுப்பைப் போலிருக்க வேண்டுமென்பதே இத் திருமறை வாக்கியத்தின் பொருள். தன் ஜீவனையும் என்பதுதான் மிகக் கடினமான சொற்றொடராகக் காணப்படுகிறது. சுயத்தின்பாற் கொள்ளும் அன்பே சீஷத்துவத்தைத் தடுக்கும் மிக வலிய தடைகளில் ஒன்று. அவருக்காக நம் உயிரையே கொடுக்க மனதுள்ளவர்களாகும்வரையில் அவர் நம்மை அங்கீகரிக்கக்கூடிய ஒரு நிலையை நாம் அடைய முடியாது.

2. சுயத்தை மறுத்தல்

ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால் அவன் தன்னைத்தான் வெறுத்து.......... பின்பற்றக் கடவன் (மத்தேயு. 16:24). சுயத்தை மறுப்பது சுயவெறுப்புச் செயல்களும் வெவ்வேறானவை. சுயவெறுப்புச் செயல்கள் சில குறிப்பிட்ட உணவு வகைகளையும், உடைகளையும் உல்லாசங்களையும் விட்டு விடுதலைக் குறிக்கும். ஆனால் சுயத்தை மறுப்பது என்பது சுயத்திற்கு எவ்வித உரிமைகளோ, அதிகாரங்களோ கொஞ்சங்கூடி இல்லாதபடி கிறிஸ்துவின் ஆளுகைக்கு முற்றிலும் ஒப்புக்கொடுத்தல் ஆகும். அதாவது சுயம் சிங்காசனத்தை விட்டு அகலுகிறது. ஹென்றி மார்ட்டின் என்பவர் கூறியது இதனை விளக்குகிறது. ஆண்டவரே, என் சித்தம் என்பதே எனக்கு வேண்டாம். என் மெய்யான மகிழ்ச்சி வெளிப்புறமாக எனக்கு நேரிடக்கூடிய எதையும் ஒரு சிறு அளவிலாவது சார்ந்திருப்பதாக நான் கருதவும் வேண்டாம். உம் சித்தத்தோடு ஒன்றாகி நிற்பதைப் பொறுத்தே என் மகிழ்ச்சி உள்ளது என்று நான் சிந்திக்கச் செய்யும்.

3. மனதாரச் சிலுவையைத் தெரிந்துகொள்ளுதல்


ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு................ என்னைப் பின்பற்றக் கடவன் (மத்தேயு.16:24). சிலுவை என்பது உடலுறுப்புக் குறைபாடோ அல்லது மனவியாகுலமோ அல்ல. இவையெல்லாம் மனிதருக்கு பொதுவானவை. சிலுவை என்பது வேண்டுமென்றே தெரிந்துகொள்ளப்படுகிற ஒரு பாதை ஆகும். அது இவ்வுலத்தைப் பொறுத்த அளவில் மதிப்பற்றது. நிந்தை நிறைந்த வழி, என்று சி.ஏ கோட்ஸ் என்பார் கூறுகிறார். தேவமைந்தன் மீது உலகம் குவித்ததும், உலக அலைகளுக்கு எதிர்த்து நிற்பதைத் தெரிந்து கொள்வோர்மேல் குவிப்பதுமான அவமானத்திற்கும், பாடுகளுக்கும், இகழ்ச்சியுரைகளுக்கும் சிலுவை அறிகுறியாகும். உலகத்தோடும் அதன் வழிகளோடும் இசைந்து நடப்பதன் மூலம் எந்த விசுவாசியும் சிலுவையை ஒதுக்கித் தள்ளிவிடக்கூடும்.


4. கிறிஸ்துவைப் பின்பற்றுதலில் செலவிடப்படும் வாழ்க்கை

ஓருவன் என்னைப் பின்பற்றிவரவிரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக் கடவன். (மத். 16:24). இதன் பொருளை அறிய கர்த்தராகிய இயேசுவின் வாழ்க்கை எத்தகையதாயிருந்தது? என்ற கேள்வியைக்கேட்கவேண்டும். அது தேவனுடைய சித்தத்துக்கு கீழ்படிந்த வாழ்க்கை. பரிசுத்த ஆவியானவரின் வல்லமையில் நடத்தப்பெற்ற வாழ்க்கை. தன்னலம் கருதாது பிறருக்காக உழைத்த வாழ்க்கை. கொடிய அநீதியைச் சாந்தத்தோடு நீடிய பொறுமையோடும் சந்தித்த வாழ்க்கை. வைராக்கியம் நிறைந்து, தன்னைத் தானே செலவுசெய்து, தன்னடக்கத்தையும் சாந்தத்தையும், இரக்கத்தையும், உண்மையையும், பக்தியையும் வெளிப்படுத்தின வாழ்க்கை (கலா. 5:22-23). அவரது சீஷராக இருக்க வேண்டுமானால் அவர் நடந்தபடியே நாமும் நடக்கவேண்டும். கிறிஸ்துவின் சாயல் நம்மில் விளங்கவேண்டும் (யோவான். 15:8).

5. கிறிஸ்துவுக்கு உரியவர்கள் அனைவர் பேரிலும் ஊக்கமான அன்பு

நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருற்தால், அதனால் நீங்கள் என்னுடைய சீஷர்கள் என்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள் (யோவான். 13:35). இதுதான் ஒருவன் தன்னைக்காட்டிலும் பிறர் மேலானவர் என்று எண்ணுகிற அன்பு திரளான பாவங்களை மூடுகிற அன்பும், நீடிய சாந்தமாகவும், தயவாகவும் இருக்கிற அன்பும் இதுவே. இந்த அன்பு தன்னைத்தானே புகழ்வதில்லை. தனக்கானதை நாடுவதையும், சினமடைவதையும், தீங்கு நினைப்பதையும், இது தவிர்க்கிறது. எல்லாவற்றையும் தாங்குகிறது. அனைத்தையும் விசுவாசிக்கிறது, சகலத்தையும் நம்புகிறது, சகலத்தையும் சகிக்கிறது, (1 கொரி. 13:4-7). இந்த அன்பு இல்லாத சீஷத்துவம், வெறும் விதிகளை மட்டுமே கடைப்பிடிக்கிற குளிர்ந்துபோன துறவறமே தவிர வேறல்ல.

6. வேதத்தை உறுதியாகப் பற்றிக்கொள்ளுதல்

நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள் (யோவான். 8:31). உண்மையான சீஷத்துவத்திற்குத் தொடர்ந்து நிலைத்திருத்தல் இன்றியமையாதது. நன்கு தொடங்குதல், மின்னலைப்போல ஒளிவீசி முன்செல்லுதல் எளிது. ஆனால் முடிவுவரை தொடர்ந்து நிலைத்திருத்தலே உண்மைநிலையை பரிசீலனை செய்யும் சோதனை. கலப்பையைக் கைப்பிடித்தபின் அதனை விட்டு விலகுகிறவன் தேவனுடைய இராட்சியத்துக்கு ஏற்றவனல்ல (லூக்கா. 9:62). அவ்வப்பொழுது தோன்றிமறைகிற கீழ்படிதல் போதாது. கேள்வி கேட்காமல், எப்போதும் கீழ்படிந்து, கிறிஸ்துவுக்குப் பின்சொல்வோரே அவருக்கு வேண்டும்...

7. அவரைப் பின்பற்றி அனைத்தையும் கைவிடுதல

அப்படியே உங்களில் எவனாகிலும் தனக்கு உண்டானவைகலையெல்லாம் வெறுத்துவிடாவிட்டால் அவன் எனக்கு சீஷனாயிருக்க மாட்டான் (லூக்கா. 14:33). சுPஷத்துவத்தின் நிபந்தனையாகக் கிறிஸ்துவானவர் விதித்தவைகளில் ஒருவேளை, விரும்பத்தகாததாகக் காணப்படுவது இதுதான். திருமறை வாக்கியங்களில் எல்லாம் மிகவும் பிரியமற்ற வசனமாக இது விளங்கக்கூடும். மதிநுட்பம் உள்ள இறையியல் வல்லுநர்கள் பல காரணங்களைக்காட்டி இவ்வசனம் நேரடியாகக் கூறுவது அதன்பொருளாகாது என்று என வாதாடலாம். ஆனால் சாதரண சீஷர்கள் கர்த்தராகிய இயேசு தாம் பொழிந்த செற்களின் பொருளை அறிந்துதான் பேசினார் என்றெண்ணி, அதை அப்படியே பருகுகின்றனர். எல்லாவற்றையும் விட்டுவிடுதல் என்பதன் பொருள் என்ன? ஒருவன் தன் உடமைகளில் தன் அடிப்படைத் தேவைகளுக்கு மிஞ்சினவைகளும் கிறிஸ்துவின் நற்செய்தியைப் பரப்பப் பயன்படக் கூடியவைகளுமான எல்லாவற்றையும் கொடுத்துவிடுதல் என்பதே இதன் பொருள். எல்லாவற்றையும் வெறுத்துவிடுகிறவன் வீணில் அலையும் ஊர்சுற்றியாகி விடுவதில்லை. தனக்கும் தன் குடும்பத்துக்குமுள்ள தேவைகளை நிறைவாக்க அவன் கடினமாய் உழைக்கிறான். கிறிஸ்து சேவை முன்னேற்றமடைவதையே தன் வாழ்க்கையின் வாஞ்சையாக அவன் கொண்டிருப்பதால், தன் அன்றாட தேவைகளுக்கு மிஞ்சின அனைத்தையும் கர்த்தருடைய வேலைக்காக செலவழித்து எதிர்காலத்தை தேவனிடம் விட்டுவிடுகிறான். தேவனுடைய இராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தான் முதலாவது தேடுவதால் தனக்கு உணவும் உடையும் குறைவின்றிக் கொடுக்கப்படும் என்பது அவன் நம்பிக்கை. கிறிஸ்துவின் நற்செய்தியைப் பெறாததால் ஆத்துமாக்கள் அழிவடைகையில் தனக்குப் போக மிஞ்சினதை மனதார தனக்கென்று மீத்து வைக்க அவனால் முடியாது. கிறிஸ்துவானவர் தம் பரிசுத்தவான்களுக்காக மீண்டும் வரும்போது செல்வமெல்லாம் அழிந்துவிடும். செல்வத்தைச் சேர்ப்பதில் அவன் தன் வாழ்க்கையை வீணாக்குவதை விரும்பவில்லை. பூமியின் பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்க வேண்டாம் என்ற ஆண்டவரின் அறிவுரைக்கு கீழ்படிவதே அவன் அவா. எல்லாவற்றையும் வெறுத்துவிடுவதால் எப்போதும் எவ்விதத்திலும் தனக்கென்று வைத்திருக்கக் கூடாதவற்றையும் தான் அன்பு செலுத்தாமல் விலக்கி விட்டவற்றையும் அவன் கொடுத்துவிடுகிறான்.

கிறிஸ்தவ சீஷத்துவத்தின் ஏழு நிபந்தனைகள் இவையே. தெளிவானதை மட்டுமல்ல, இரு பொருள் தந்து குழப்பத்தை எழுப்பாதவைகளாகவும் இருக்கின்றன. இந்த ஏழினையும் தொகுத்துரைக்கும் செயலில் இந்நூலின் ஆசிரியர் தம்மைத்தாமே பயனற்ற பணியாள் என்று தீர்த்துவிட்டதை உணருகின்றார். ஆனால் தேவனுடைய மக்களின் தோல்வி அவருடைய உண்மையை எப்போதும் அடக்கிவைக்க காரணமாக முடியுமா?. செய்திக்காரனைக் காட்டிலும் செய்தி எப்போதும் பெரியது என்பது உண்மை அல்லவா? தேவனே சத்தியபரர் என்றும், எந்த மனிதனும் பொய்யன் என்றும் சொல்லுவது பொருதத்மானதல்லவா? நான் அழிந்தாலும் உம் சித்தம் நிறைவேறட்டும். என்று கூறிய பெருமகனோடு நாமும் சேர்ந்துகொள்ள மாட்டோமா?

சென்றுபோன நம் வீழ்ச்சியை அறிக்கையிட்டு, நம்பேரில் கிறிஸ்துகொண்டுள்ள உரிமைகளை துணிவுடன் ஏற்று, இனிமேல் நமது மகிமையான ஆண்டவருக்கு உண்மையான சீஷராயிருக்க நாடுவோமாக...

Post a Comment

0 Comments