இன்றைய வசனம் :-மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள். ரோமர் 8:14

அப்போஸ்தலன் பவுல் வரலாறு APOSTLE PAUL HISTORY


அப்போஸ்தலன் பவுல் வரலாறு

போதகரும் சிறுவனும் ஒரு மேஜையின் இரு முனைகளில் அமர்திருந்தனர் . போதகர் வெகு நேரம் கழித்து சிறுவனிடம்,"ஆண்டவர் எங்கே? '' என்று கேட்டார். சிறுவனுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. மீண்டும் அவர் "ஆண்டவர் எங்கே ?" என்று சப்தத்தை உயர்த்திக் கேட்டார்.சிறுவனுக்கு வேர்த்துக்கொட்டியது. பயந்திருந்தான். என்ன சொல்வதென்று தெரியவில்லை.மூன்றாம் முறை போதகர், மேஜையின் மீது பலமாகத் தட்டி, "ஆண்டவர் எங்கே?" என்று கோபமாய் கேட்டார். சிறுவன் ஒரே ஓட்டமாக வீட்டிற்கு ஓடிவந்துவிட்டான். அவனுடைய அண்ணன் என்ன தம்பி? "ஏன் இப்படி வேர்க்க விறுவிறுக்க ஓடி வருகிறாய்? என்று கேட்டான்?". சிறுவன் அண்ணனிடம்," நாம் மிகவும் பெரிய பிரச்சனையில் மாட்டிக்கொண்டோம் அண்ணா...இந்த முறை ஆண்டவரைக் காணவில்லையாம்! நாம் தான் திருடிவிட்டோம் என்று சந்தேகப்படுகின்றனர்" என்றான்.
நம்முடைய வாழ்வில் ஆண்டவர் எங்கே?"
இது நகைச்சுவையான கதை. ஆனால், நம்முடைய வாழ்வில் ஆண்டவர் எப்பொழுதாவது காணாமல் போனதுண்டா? நம்முடைய நீண்ட கால வாழ்கையில் எத்தனை முறை மற்றவர்கள் நம்மில் கிறிஸ்துவைக் கண்டுள்ளார்கள். அவருடைய அச்சடையாளங்கள் நம்மில் உண்டா?
முழு வேதாகமத்திலும் ஒரு மனிதன் தேவனோடு ஒரு சந்திப்பில் வரும்போது, தேர்தெடுக்கப்பட்டபின் , அவர்களுடைய முன் வாழ்க்கைக்கும் , பின் வாழ்க்கைக்கும் வித்தியாசம் உண்டு. அவர்கள் மீண்டும் பழைய மனிதர்களாக வாழ்ந்ததில்லை.
மோசே ,எகிப்தின் அரண்மனையை விட்டு ஆடுகளின் .மேய்ப்பனாய் வாழ்ந்தான். முட்செடியின் அருகில் சென்று கர்த்தரைக் கண்ட பின்னர், செங்கடலைப் பிரிக்கத்தக்க விசுவாசம் உள்ளவன் ஆனான். உறங்கிக்கொண்டிருந்த சாமுவேல் ஆண்டவரின் அருகில் சென்று, கர்த்தாவே சொல்லும் அடியேன் கேட்கிறேன் என்று கூறிய பின்னர் இஸ்ரவேலின் தீர்க்கதரிசி ஆனான். தாவீதின் சகோதரர்கள் சாமுவேலிற்கு முன்பாக நின்றப் பொழுது, தேவன், நான் இவர்களை தெரிந்துகொள்ளவில்லை. மனுஷன் முகத்தை பார்க்கிறான், தேவனோ இருதயத்தை பார்க்கிறார், என்று கூறினார். சிறியவனாகிய தாவீதை தேர்ந்தெடுத்தார்.ஒரு கூழாங்கல் கொண்டு கோலியாத்தை வீழ்த்தினான்.அது போல, கர்த்தரால் தெரிந்துகொள்ளப்பட்டு , சபையின் வரலாற்றில் ஒரு பெரிய எழுப்புதலை கொண்டுவந்தவன் பவுல்.

சவுலின் இரட்சிப்பு

அப்போஸ்தலர் 9 ம் அதிகாரத்தில், சவுல் என்பவன் பிரதான ஆசாரியர்களிடம் நிருபங்களை வாங்கிக் கொண்டு தமஸ்குவின் பரிசுத்தவான்களை பிடித்துவரும்படியாக சென்றான். அப்பொழுது, வானத்திலிருந்து சடிதியாய் ஒரு ஒளி அவனை சுற்றி பிரகாசித்து அவனைக் கீழே விழத்தள்ளிற்று. 'சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய்?' என்ற ஒரு சத்தம் கேட்டது. அதற்கு சவுல்,"ஆண்டவரே நீர் யார்?" என்றுக் கேட்டான். சவுல், 'நீர் யார்?' என்றுக் கேட்காமல், 'ஆண்டவரே நீர் யார்? 'என்று கேட்டான். இயேசு அவனுடைய ஆண்டவராக மாறினார். அவன் பின் நாட்களில் சபையின் வரலாற்றில் மிகவும் முக்கிய பங்கு வகிப்பதை நாம் உணரலாம்.சவுல் பவுலாக மாறிய பின் அவனுடைய வாழ்க்கை மாறியது.
பவுலின் அழைப்பு
புதிய ஏற்பாட்டின் 27 அதிகாரங்களில் 13 நிருபங்கள் அப்போஸ்தலனாகிய பவுலினால் எழுதப்பட்டது. இந்நிருபங்கள் இன்றைய விசுவாசிகளின் ஆவிக்குரிய வளர்ச்சிக்கு மிகவும் பிரயோஜனமானவைகள் என்பதை நாம் அறிவோம். அப்போஸ்தலர் 9,22,26 ஆகிய அதிகாரங்களில் சவுல் பவுலாக மாறிய வரலாறு கொடுக்கப்பட்டுள்ளது . 26ம் அதிகாரத்தில் தேவன் தன்னை அழைத்த அழைப்பின் நோக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது. 16-18ம் வசனங்களில்,
"இப்பொழுது நீ எழுந்து, காலுன்றி நில். நீ கண்டவைகளையும் நான் உனக்குத் தரிசனமாகி காண்பிக்கப்போகிறவைகளையும் குறித்து உன்னை ஊழியக்காரனாகவும் சாட்சியாகவும் ஏற்படுத்துகிறதற்காக உனக்குத் தரிசனமானேன். உன் சுயஜனத்தாரிடத்தினின்றும் அந்நிய ஜனத்தாரிடத்தினின்றும் உன்னை விடுதலையாக்கி ,அவர்கள் என்னைப் பற்றும் விசுவாசத்தினாலே பாவமன்னிப்பையும் பரிசுத்தமாக்கப்பட்டவர்களுக்குரிய சுதந்தரத்தையும் பெற்றுக்கொள்ளும்படியாக, அவர்கள் இருளைவிட்டு ஒளியினிடத்திற்கும் , சாத்தனுடைய அதிகாரத்தைவிட்டு தேவனிடத்திற்கும் திரும்பும்படிக்கு நீ அவர்களுடைய கண்களை திறக்கும் பொருட்டு, இப்பொழுது உன்னை அவர்களிடத்திற்கு அனுப்புகிறேன் என்றார்."
தன் வாழ்நாள் முழுவதும் இந்த அழைப்புக்கு பாத்திரவானாக பவுல் நடந்துகொண்டான். நம்மை தேவன் ஒரு நோக்கத்தோடு அவரண்டை அழைத்து இருக்கிறார். நாம் அந்த அழைப்பை உணர்ந்து அதன்படி வாழ்கிறோமா? தேவன் இந்த உலகத்தின் வழக்கங்களில் இருந்து நம்மை பிரித்தெடுத்து அவருடைய சொந்த இரத்தத்தினால் கழுவி , சபையில் அங்கமாய் வைத்துள்ளார். அதன் நோக்கம் என்ன? அதை நாம் புரிந்து அதற்கு ஏற்றார் போல் வாழவேண்டும் .
பவுலின் நிருபங்களின் பின்னணி
இப்பொழுதும் பவுலோடு சேர்ந்து பிரயாணப்பட்டு , அவர் எழுதிய நிருபங்களின் காலம், நோக்கம், இடம் போன்றவைகளை படிப்பது நம்முடைய ஆவிக்குரிய வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்..

புதிய ஏற்பாட்டின் 27 அதிகாரங்கள் உள்ளது என்று நாம் அறிவோம். இதில் முதல் நான்கு புத்தகம் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் கூறுகிறது. சபையின் வரலாறு அப்போஸ்தலர் நடபடிகளில் உள்ளது. பின்னர் ரோமர் தொடங்கி பிலேமோன் வரை 13 நிருபங்கள் பவுலின் நிருபங்கள் ஆகும். எபிரெயர் நிருபத்தின் ஆசிரியர் பற்றி குறிப்பு இல்லை. அதற்கு பின், யாக்கோபு முதல் யூதா வரை 7 நிருபங்கள் பொதுவான நிருபங்கள். கடைசியாக, வெளிப்படுத்தின விசேஷம் வருங்காலத்தை பற்றி பேசுகிறது. பவுலின் நிருபங்கள் இரண்டு வகைப்படும். சிறையில் இருக்கும் போது எழுதிய சிறையிருப்பின் நிருபங்கள் (prison epistles)மற்றும் சபையின் போதகர்களுக்கு எழுதிய போதக நிருபங்கள் (pastoral epistles).

முதல் மிஷனரி பயணம் -

கலாத்தியர்(அப்போஸ்தலர் 13-15)
அப்போஸ்தலர் 9ம் அதிகாரத்தில் சவுலின் மாற்றம் குறிக்கப்பட்டுள்ளது. பின்னர், அப்போஸ்தலர் 12ம் அதிகாரத்தில் , 'ஆறுதலின் மகன்' என்ற பெயர் கொண்ட பர்னபாவை சந்திக்கிறார். இந்த பர்னபா பவுலை அப்போஸ்தலர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறார். 13,14ம் அதிகாரத்தில் பவுலும் , பர்னபாவும் இணைந்து ஊழியம் செய்வதாக வாசிக்கிறோம். அப்.13:2 ல் , பவுலும் பர்னபாவும் முதல் மிஷனரி பயணம் தொடங்குகிறார்கள். அப்பொழுது அநேக இடங்களில் ஊழியம் செய்து வந்தனர். அதில் 'கலாத்தியா' என்ற பட்டணத்திலும் வேத வசனங்களை எடுத்துக் கூறி , விசுவாசித்தவர்கள் சபையாகக் கூடி தேவனை ஆராதித்தனர். பின்னர், முதல் மிஷனரி பயணம் முடிந்து திரும்பி வரும் போது கலாத்தியா சபையார் நடுவே , கள்ளப் போதகர்கள் வந்து, மக்களை திசை திருப்பினர். உண்மையல்லாத காரியங்களை அவர்கள் பிரசிங்கித்தனர். அப்போஸ்தலனாகிய பவுல் , இரட்சிப்பு நியாயப்பிரமாணத்தினால் அல்ல, கிறிஸ்துவினால் வருகிறது. நீங்கள் எல்லோரும் விடுதலை ஆக்கபட்டீர்கள் . நியாயப்பிரமாணத்திற்கு உடன்பட்டவர்கள் அல்ல என்று பிரசிங்கித்தார். அதை அவர்கள் விசுவாசித்து ஏற்றுக்கொண்டார்கள். பின்னர், கள்ளப் போதகர்கள் வந்து, நீங்கள் மோசேயின் நியாயப்பிரமாணத்தின்படி விருத்தசேதனம் செய்யாவிட்டால், இரட்சிக்கப்படமாட்டீர்கள் என்று உபதேசித்தனர். இதனை கேட்ட கலாத்தியா சபையார் குழம்பினர். நாம் விடுதலையாக உள்ளோமா? அல்லது நியாயப் பிரமாணத்தின்படி கீழ்ப்பட்டு உள்ளோமா ? எனவே, பவுல் அவர்களது குழப்பங்களை நீக்க முதலாவதாக எழுதிய நிருபம் தான் கலாத்தியர் நிருபம். இதில் நாம் இனி ஒருபோதும் நியாயப் பிரமாணத்தின் கீழ் இல்லை. கிறிஸ்துவின் பிரமாணத்தினால் விடுதலையாக்கப்பட்டோம் . ஆகவே, மாம்சத்தில் விருத்தசேதனம் செய்ய தேவை இல்லை . இருதயத்தில் உண்டாகும் விருத்தசேதனமே மெய்யான விருத்தசேதனம் . என்று கூறினார். இதனை கலாத்தியர் 3ம் அதிகாரத்தில் வாசிக்கமுடியும். இந்த முதல் நிருபத்தை முதல் மிஷனரி பயணத்தில் எழுதினார். அப்.13,14 அதிகாரங்கள் முதல் மிஷனரி பயணத்தை கூறுகிறது. 15ல் கலாத்தியருக்கு எழுதிய நிருபத்தின் பொருளடக்கம் கூறப்பட்டு உள்ளது.
இரண்டாம் மிஷனரி பயணம் - I,II தெசலோனிக்கேயர் (அப்போஸ்தலர் 16-18)
அப்போஸ்தலர் 16-18 அம் அதிகாரம் பவுலின் இரண்டாம் மிஷனரி பயணம் உள்ளது. பவுலும் சீலாவும் செல்லுகின்றனர். அதில் சந்தித்த ஒரு இடம் 'தெசலோனிக்கே' பட்டணம். அங்கு உள்ள விசுவாசிகள் பவுலின் வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு சபையாக கூடிவந்தனர். தேவன் அங்கு வல்லமையாக கிரியை செய்தார். கலாத்திய நாட்டில் நடந்தது போலவே, சாத்தான், கள்ள போதகர்களை அனுப்பி 'தெசலோனிக்கே' சபையின் மக்களை திசை திருப்பினான். இந்த முறை கிறிஸ்துவின் இரகசிய வருகை குறித்து கள்ள போதகம் பரம்பிற்று. சிலர், கிறிஸ்து வந்துவிட்டார் என்று கூறினார். அப்படியானால், விசுவாசிக்கும் எங்களின் நிலை என்ன?ஏற்கனவே விசுவாசித்து மரித்தவர்கள் கதி என்ன ?என்று தெசலோனிக்கே சபையார் பவுலிடம் கேட்டனர். அதற்கு விளக்கமாக I தெசலோனிக்கேயர் என்ற நிருபத்தை எழுதிக் கொடுத்தார். அதனுடைய பொருளடக்கத்தை I தெசலோனிக்கேயர் 4:16,17 வசனங்களில் வாசிக்கலாம்."..கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கி வருவார். அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்ப்பார்கள். பின்பு, உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக, மேகங்கள்மேல்,அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்.
இதனை வாசித்த தெசலோனிக்கே சபையார் தங்களுடைய சந்தேகங்களை எழுப்ப்பினர். அதனையும் தெளிவு படுத்தி, மேலும் கள்ளபோதகர்கள், அந்தி கிறிஸ்து பற்றிய விளக்கங்களையும் , கடைசி கால சம்பவங்களையும் பற்றி இரண்டாம் நிருபம் எழுதிக் கொடுத்தார்.
எனவே, அப்போஸ்தலர் 16-18 வரை உள்ள அதிகாரங்களில் இரண்டாம் மிஷனரி பயணமும், அப்பொழுது இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை குறித்தான விளக்கங்களை தெசலோனிக்கே சபையாருக்கு, இரண்டு நிருபங்கலாக எழுதிகொடுக்கப்பட்டது. அவை I,II தெசலோனிக்கேயர்.
மூன்றாம் மிஷனரி பயணம் - I,II கொரிந்தியர், ரோமர் (அப்போஸ்தலர் 18-21)
பவுல் தனது மூன்றாம் மிஷனரி பயணத்தில் கொரிந்து பட்டணத்தை சந்தித்தான். ஆனால், வழக்கம்போல சபையார் பவுல் சென்றபின் வழிவிலகிச் சென்றனர். பவுல் மீண்டும் கொரிந்து பட்டணத்திற்கு வரும்போது அந்த சபையாரைப் பற்றி கேடான சாட்சி நிலவி வந்தது. அந்நாட்களில்,'நீ ஒரு கொரிந்தியன்!' என்பது அவச் சொல்லாக கருதப்பட்டு வந்தது. ஏனென்றால், கொரிந்து சபையாரின் சாட்சி மிகவும் மோசமானதாக இருந்தது. அவர்களுக்குள் பிரிவினைகள், ஒழுங்கின்மை, முரட்டாட்டம், போன்ற பழக்கங்கள் இருந்தது. இன்றைய நாட்களில் காணப்படுவது போல சபைக்குள் வகுப்புவாதங்கள், ஆவிக்குரிய வரங்களை தவறான முறையில் உபயோக்கித்தல் ஆகியனவும் காணப்பட்டது. எனவே, முதலாம் நிருபத்தை எழுதிக் கொடுத்தார். அதில் மிகவும் கடினமாக , உங்களில் நன்மையான காரியம் ஒன்றும் இல்லை என்று அநேக இடத்தில் குறிப்பிடுவதைக் காணலாம்.
அதை வாசித்த கொரிந்து சபையார், தங்கள் தவறுகளை உணர்ந்து மனந்திரும்பினர். தேவனிடம் மன்னிப்பு கேட்டனர். தங்களை மீண்டும் அர்ப்பணித்தனர் . எனவே , அவர்களை ஊக்குவிப்பதற்காக இரண்டாம் நிருபத்தை எழுதினர்.
பின்னர், காயு என்ற சகோதரன் வீட்டில் தங்கி இருக்கும் போது ரோமாபுரியிலிருந்து பெபேயால் என்ற சகோதரி பவுலை காண வருகிறாள். அவளிடம் ரோமாபுரியில் இருக்கும் சபையாருக்கு எழுதிக் கொடுத்த நிருபம் தான் ரோமர் . இதனை ரோமர் 16:1,2,23 போன்ற வசனங்கள் மூலம் அறிந்துகொள்ளலாம்.
'கெங்கிரேயா ஊர் சபைக்கு ஊழியக்கரியாகிய நம்முடைய சகோதரி பெபேயாளை நீங்கள் கர்த்தருக்குள் பரிசுத்தவான்களுக்கேற்றபடி ஏற்றுக்கொண்டு, எந்தக் காரியத்தில் உங்கள் உதவி அவளுக்கு தேவையாயிருக்கிறதோ அதிலே நீங்கள் அவளுக்கு உதவிசெய்ய வேண்டுமென்று அவளை உங்களிடத்தில் ஒப்புவிக்கிறேன்; அவள் அநேகருக்கும் எனக்கும்கூட ஆதரவாயிருந்தவள்.
23ம் வசனம், 'என்னையும் சபையனைத்தையும் உபசரித்துவருகிற காயு உங்களை வாழ்த்துகிறான்."
நான்காம் மிஷனரி பயணம் - சிறைச்சாலை நிருபங்கள் (அப்போஸ்தலர் 18-21)
அப்போஸ்தலர் 21 :10 வது வசனத்தில் வாசிப்பது போல் அகபு என்ற தீர்க்கதரிசி பவுல் எருசலேமில் கட்டப்படுவான் , சிறைபடுத்தப்படுவான் என்று உரைக்கிறான். அதற்கு பவுல் 'எருசலேமில் நான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்காகக் கட்டப்படுவதற்கு மாத்திரமல்ல , மரிப்பதற்கும் ஆயத்தமாய் இருக்கிறேன் என்றான்'. அதுபோல அப்போஸ்தலர் 21-28 வரை நான்காம் மிஷனரி பயணம் மேற்கொள்வதையும் , அதிலே எருசலேமில் அகபு உரைத்ததுபோல கைது செய்யப்பட்டு ரோமாபுரிக்கு செல்வதையும் காணலாம். அப்போஸ்தலர் 28ம் அதிகாரத்தில் பவுல் ஒரு வீட்டில் கைதியாக வைக்கப்பட்டுள்ளதாக வாசிக்கிறோம். அங்கு இருந்து நான்கு நிருபங்களை எழுதினான். அவை எபேசியர் , பிலிப்பியர், கொலோசெயர், பிலேமோன் . இவை சிறைச்சாலை நிருபங்கள் எனப்படும்.

இதில் ஒரு உண்மையான விசுவாசியின் சிந்தையை நாம் பவுலின் வழியாகக் காணமுடியும். சிறைச்சாலை கட்டுகளின் நடுவே சந்தோசமாயிருங்கள் என்று கூறினார்- பிலிப்பியர் 4:4. மற்றும் அங்கு இருந்த ரோமக் காவலாளிகளுக்கும் சுவிஷேசத்தைப் பிரசங்கித்தார். பிலிப்பியர் 1:13- 'அரண்மனை எங்குமுள்ளவர்களுக்கும் மற்ற யாவருக்கும் என் கட்டுகள் கிறிஸ்துவுக்குள்ளான கட்டுகளென்று வெளியரங்கமாகி,' என்று உள்ளது. இதுவே எந்த நிலையிலும் மனரம்மியமாய் இருக்கக் கற்றுக்கொண்ட பவுலின் சாட்சி . பின்னர் கொலோசெயருக்கு நிருபம் எழுதினார். அந்த கொலோசே சபை பிலேமோன் என்ற மூப்பன் வீட்டில் கூடி வந்தது. எனவே, சபைக்கும், மூப்பனாகிய பிலேமோனுக்கும் நிருபங்களை எழுதினார். இவை, நான்காம் மிஷனரி பயணத்தில், முதலாம் முறை சிறைப்பிடிக்கப்பட்டு, ரோமாபுரியில் வீட்டுக் காவலில் இருந்த போது எழுதிய நிருபங்கள்.

சபை வரலாற்று குறிப்புகள்

பவுல் வீட்டுக்காவலில் இருந்து விடுதலை செய்யப்பட்டபின் அவர் ஐந்தாம் மிஷனரி பயணம் மேற்கொண்டதாக சபையின் வரலாற்று குறிப்புகள் கூறுகின்றது. இம்முறை அவர் ஸ்பானியா தேசத்திற்கு சென்றதாகக் கருதப்படுகிறது. அப்பொழுது , நீரோ என்ற இராயன் ரோமாபுரியை ஆட்சி செய்து வந்தான். அவன் கிபி 54-68 வரை ஆட்சி செய்தான். பெரிய நகரம் கட்ட எத்தனித்து, ரோமாபுரியை புதுபிக்க நினைத்தான். அதனால் ரோம் நகரம் கிபி 64 ல் எரிக்கப்பட்டது. இதன் பழியைக் கிறிஸ்தவர்கள் மீது செலுத்தினான். அப்பொழுது அங்கு ஊழியம் செய்து வந்த பவுல் இரண்டாம் முறை சிறைப்படுத்தப்பட்டான் என்று வரலாற்று குறிப்புகள் உள்ளது. இம்முறை சிறைச்சாலையில் போடப்பட்டான். அந்த சிறைச்சாலை பூமிக்கு அடியில் கற்களால் கட்டப்பட்டது. எனவே ,அங்கு இருளும், குளிரும் இருந்தது. சுற்றம் யாரும் இல்லாத நிலையில் , எலிகள் மட்டுமே அங்கும் இங்கும் சுற்றி திரிந்தது. இந்த இடத்திலிருந்து கொண்டு தனது கடைசி மூன்று நிருபங்களை எழுதினார். அவை I,II தீமோத்தேயு , தீத்து. இவை போதக நிருபங்கள் .

பவுலின் சாட்சி

தான் வாழ்நாளின் கடைசி பகுதியில் பவுல் தீமொத்தேயுவிடம் மேலங்கி, புஸ்தகம், தோல்சுருள் ஆகியவற்றை கொண்டுவந்து தன்னைக் காணவேண்டும் எனக் கூறுகிறான். தன் சரீரத்தை காக்க மேலங்கி, ஆவியைக் காக்க தோல்சுருள்! எத்தனை எளிமையான வாழ்கை! அந்த தோல்சுருள்களில் சங்கீதம் 23:4ன்படி ,'நான் மரண இருளின் பள்ளத்தாக்கில் நடந்தாலும் பொல்லபுக்கு பயப்படேன். தேவரீர் என்னோடு கூட இருக்கிறீர். ' என்று தன்னை தேற்றிக்கொண்டு இருந்திருப்பான்.
இறுதியாக அவன் காதுகளில் பலமாக ஒரு சத்தம் கேட்டது. அந்த சிறைச்சாலை கதவு திறக்கப்பட்டது. ரோமர் சாலையில் இழுத்து கொண்டு வரப்பட்டான் .அங்கே பவுல் , தரையில் விழுந்து கிடக்கிறான். வாள் கூர்மை ஆக்கப்படுகிறது. இந்நிலையில், நமக்கு தெரிந்த பவுலின் இறுதி வார்த்தைகள் அவன் மனதில் ஓடி இருக்கக்கூடும்.
II தீமோத்தேயு 4:7ன்படி, "நல்லப் போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன். இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது."
அப்பொழுது, அவனது தலை சிரைச்சேதம் செய்யப்பட்டது. கர்த்தருக்காக இரத்த சாட்சியாய் மரித்தான்.
நம்மை நாமே ஆராய்ந்து பார்ப்போம். இயேசு கிறிஸ்து பவுலை இரட்சித்ததுபோல நம்மையும் தன் சொந்த இரத்தத்தினால் மீட்டு, சபையில் சேர்த்துக்கொண்டார். நம்முடைய சபைக்கு நாம் உபயோகமான பாத்திரமாக உள்ளோமா? என்று ஆராய்ந்து பார்போம். நம்முடைய இறுதி நாளில் நல்லப் போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன் ,விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன் என்றுக்கூற இயலுமா? என்பதை சிந்தித்து, தேவனுக்கு ஒப்புக்கொடுத்து வாழ்வோம்.
நன்றி

Post a Comment

6 Comments

  1. superb brother thank your information

    ReplyDelete
  2. Very useful for my life with hurdles and it is easy to feel and understand the exact meaning in our own mother tongue (Tamil ). PRAISE THE LORD JESUS CHRIST .

    ReplyDelete
  3. மிகவும் நேர்த்தியாக விளக்கப்பட்டுள்ளது.மிகவும் பிரயோஜமானது.. மிக்க நன்றி..

    ReplyDelete
  4. Praise the Lord neither death nor life shall be able to seperate us from the love of God which is in Christ jesus our lord

    ReplyDelete
  5. Praise the lord Truth Explanation , God Bless Your team

    ReplyDelete