இன்றைய வசனம் :-மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள். ரோமர் 8:14

இருமனமுள்ளவன்.... An indecisive

   இருமனமுள்ளவன்

சலவைத் தொழிலாளி ஒருவன் ஆற்றங்கரையில் துணி துவைத்துக் கொண்டிருந்தானாம். ஏற்கனவே துவைத்த துணிகளில் சிலவற்றைக் காயவிட்டிருந்தான். திடீரென்று பலமான காற்று ஒன்று ஆரம்பித்தது. காற்றின் வேகம் அதிகரித்ததும் சலவைத்தொழிலாளி தண்ணீரிலிருந்து வெளியேறி, காய்ந்த சில துணிகளைக் சேகரிக்கச் சென்றானாம். தீடீரென்று கரையில் கட்டி வைத்திருந்த படகு நினைவிற்கு வர, காற்றின் அகோரத்தில் படகு அறுந்து தண்ணீரோடு போய்விடக்கூடாது என்று நினைத்து படகைப் பத்திரமாக கட்டி வைக்க அங்கு விரைந்தார்.

பாதி வழியில், காய்ந்து கொண்டிருந்த துணிகளில் மிகவும் விலைமதிப்பு மிக்க சில சேலைகள் இருப்பது நினைவிற்கு வர படகைவிட்டு விட்டு துணிகளைச் சேகரிக்க ஓடினான். அதற்குள் காற்றின் வேகம் அதிகரிக்க, சூறாவளிக்காற்றில் சிக்கின துணிகள் அனைத்தும் பறந்து போயினவாம். படகையாவது காப்பாற்றுவோம் என நினைத்து படகை நோக்கி ஓட கயிறு அறுந்து படகும் காற்றினால் அடிபட்டு தண்ணீரில் ஓடிவிட்டது. "இரண்டையும் இழந்த சலவைத் தொழிலாளி'' என்ற தெலுங்கு பழமொழி ஒன்றின் அடிப்படையில்
எழுதப்பட்டதுதான் இந்தக் கதை.

இதுவும் வேண்டும், அதுவும் வேண்டும் இதையும் விட மனதில்லை. அதையும் விட மனதில்லை என்று இருமனதோடு வாழ்வது பரிதாபம் தான். இரண்டும் கையைவிட்டுப் போகும். அவர்கள் காற்றினால் அடிபட்டு அலைகின்ற கடலின் அலைக்கு ஒப்பானவர்களாம். சந்தேகமே, இருமனத்திற்குக் காரணம். லோத்தின் மனைவி சிறந்த உதாரணம் + எச்சரிப்பு.

இயேசுவும் வேண்டும் உலகமும் வேண்டும் என்பது முடியாத காரியம். இயேசுவையும் விட மனதில்லை. உலகத்தையும் விட மனதில்லை யென்னும் நிலை ஆபத்து + எச்சரிப்பு. ஆண்டவரைப் பின்பற்றும் விஷயத்தில், ஆண்டவர் மீது கொண்டுள்ள நம்பிக்கையில் உறுதியாய் நிலை நிற்போம். எந்த மட்டும் இரண்டு நினைவுகள்? இருமனம் குந்தி நடப்பதற்குச் சமமாம்.

அன்புக்குரியவர்களே! இருமனமுள்ளவர்களால் தேவனை ஒருபோதும் பிரியப்படுத்த முடியாது. தேவனை உறுதியாய்ப் பற்றிக்கொள்ளவும் முடியாது. மட்டுமல்ல; தேவனிடம் இருந்து எதையும் பெற்றுக்கொள்ளவும் முடியாது.

"இருமனமுள்ளவன் தன் வழிகளிலெல்லாம் நிலையற்றவனாய் இருக்கிறான்'' - யாக்கோபு 1:8.

  

Post a Comment

0 Comments