ஜெபத்தைக் குறித்து ஜாண் பன்னியன் கொடுத்த தேவச் செய்தி
ஜெபம் பண்ண ஆரம்பிப்பதற்கு முன்பாக நீ உனது ஆத்துமாவிடம் இவ்விதமாக கேள்விகள் எழுப்ப வேண்டும். "ஓ என் ஆத்துமாவே, நீ என்ன நோக்கத்தோடு இந்த இடத்துக்கு வந்தாய்? ஜெபத்திலே உன் ஆண்டவரோடு உறவாட வந்தாயா? உன் ஆண்டவர் உனது ஜெபத்தைக் கேட்க பிரசன்னராகி இறங்கி வந்திருக்கின்றாரா? அவர் உனது ஜெபத்தைக் கேட்பாரா? அவர் உனக்கு இரங்கி உதவி செய்வாரா? நீ ஜெபத்திற்காக வந்த காரியம் உனது ஆத்துமத்தின் நித்திய நன்மைக்கான காரியத்துக்காகவா? உனது ஜெபத்தில் எந்தெந்த வார்த்தைகளை கூறி உனது ஆண்டவரை உன்மேல் மனதுருகப்பண்ணப்போகிறாய்?"
ஜெபத்திற்கான உனது ஆயத்தங்கள் முழுமையடையவும், பூரணப்படவும் வேண்டுமானால் நீ உன்னை தூசியாகவும், சாம்பலுமாகவும் எண்ணிக் கொள். கர்த்தராகிய நமது ஆண்டவர் மகா பெரியவரும், வானங்களைத் திரையைப் போல விரித்து, ஒளியை வஸ்திரமாகத் தரித்து, மேகங்களைத் தமது இரதமாக்கி, காற்றினுடைய செட்டைகளின் மேல் செல்லும் மகத்துவமும், மாட்சியும் பொருந்திய மகா பெரிய தேவன் என்பதை நீ கண்டு கொள்ளல் வேண்டும். பரிசுத்தமுள்ள கர்த்தருக்கு முன்பாக நீ ஒரு நீசப்பாவி என்பதை உணர வேண்டும். சர்வ வல்லமையுள்ள தேவாதி தேவனுடைய சமூகத்தில் நீ ஊர்ந்து செல்லுகின்ற ஒரு அவலட்சணமான புழு மாத்திரமே என்பதை நீ ஞாபகத்தில் வைத்துக் கொள்ளல் மிகவும் அவசியமாகும்.
உனது ஜெபங்களில் எல்லாம் கர்த்தர் உனக்கு உனது வாழ்வில் பாராட்டின தயவுகள், இரக்கங்கள், எல்லையற்ற தாயடைவான அன்புகள், பாதுகாவல்களுக்காக அவருக்கு நன்றி ஸ்தோத்திரங்களை ஏறெடுக்க மறந்துவிடக்கூடாது.
நீ ஜெபிக்கும்போது உனது இருதயமானது தேவனுக்கு ஏறெடுக்க நன்றிப் பெருக்கோடு கூடிய புகழ்ச்சி வார்த்தைகள் இல்லாதிருந்தாலும் அதைப் பற்றிப் பரவாயில்லை. ஆனால் நீ தேவனுக்கு ஏறெடுக்கும் மன்றாட்டு வார்த்தைகளில் உனது முழுமையான இருதயக் கவனம் இல்லாமல் போய்விட அனுமதித்து விடாதே.
ஜெபம் ஒரு மனிதனை பாவம் செய்வதிலிருந்து தடுத்து நிறுத்தும் அல்லது பாவமானது ஒரு மனிதனை ஜெபிக்கவிடாதவாறு நயங்காட்டி ஜெபத்தை தடை செய்யும்.
ஒரு மனிதனுக்குள்ள தேவனைத் தேட வேண்டும் என்ற ஜெப வாஞ்சையின் ஆவியானது அநேக ஆயிரம் பொன் வெள்ளியைக் காட்டிலும் அளவிட இயலாத மாபெரும் பொக்கிஷமாகும்.
லோக மாந்தரே, அடிக்கடி ஜெபம்பண்ணுங்கள். ஏனெனில், அது ஒன்றே நமது ஆத்துமாவை வான மண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளின் தாக்குதலின்று நம்மைப் பாதுகாக்கும் கேடயமாகும். ஜெபமானது நாம் தேவனுக்கு செலுத்தும் ஜீவபலியாகவும், சாத்தானை அடித்து விரட்டி ஓட்டும் கண் எரிச்சலின் தீப்புகையாகவும் உள்ளது என்பதை நாம் ஒருக்காலும் மறந்துவிடக்கூடாது.
நன்றி பரலோகத்தின் வாசல் ஊழியங்கள்
0 Comments