தானியேல் அதிகாரம் - 1
தானியேலின் புஸ்தகம் தானியேலால் எழுதப்பட்டது. தானியேல் என்ற பெயரின் அர்த்தம் "கர்த்தரே என் நியாயாதிபதி (God is my judge) என்பதாகும்.
தானியேலின் புஸ்தகத்தை இரு பிரிவுகளாக பிரிக்கலாம். தானியேல் ஓன்று முதல் ஆறு அதிகாரங்கள் சரித்திரபகுதியாக காணப்படுகிறது. சரித்திரம் என்றால் நடந்த சம்பவங்களைப்பற்றி கூறுவதாகும். ஏழு முதல் பன்னிரண்டு அதிகாரங்கள் தானியேல் கண்ட தரிசனங்களாகும். தரிசனங்கள் என்பது நடக்கப்போகிற காரியங்களைப்பற்றி கூறுவதாகும்.
தானியேல் புஸ்தகம் இரண்டு மொழிகளில் எழுதப்பட்டிருக்கிறது. முதலாம் அதிகாரம் முதல் வசனத்திலிருந்து இரண்டாம் அதிகாரம் மூன்றாம் வசனம் வரையும், எட்டாம் அதிகாரம் ஒன்றாம் வசனத்திலிருந்து கடைசி வரைக்கும் எபிரேய மொழியில் எழுதப்பட்டுள்ளது. இரண்டாம் அதிகாரம் நான்காம் வசனத்திலிருந்து ஏழாம் அதிகாரம்; இருபத்தெட்டாம் வசனம் வரைக்கும் அராமிக்(யுசயஅயiஉ) மொழியில் எழுதப்பட்டுள்ளது.
தானியேல் புஸ்தகத்தில் தானியேலுடைய பிறப்பை பற்றியும், பெற்றோரை பற்றியும், அவருடைய வயதை பற்றியும், மரணத்தைப்பற்றியும் எதுவும் எழுதப்படவில்லை. ஆனால் அவர் இராஜகுலத்தை சேர்ந்தவர் என்பது தானியேல் 1:3-ன் படி புலனாகிறது.
யூதாவின் இராஜவாகிய யோயாக்கீம்:
இஸ்ரவேலர்கள் கானானுக்குள்ளாக பிரவேசித்தபின்பு சுமார் 450 வருஷங்கள் நியாயதிபதிகளால் விசாரிக்கப்பட்டார்கள். அவர்களுள் கடைசி நியாயதிபதி சாமுவேல். சாமுவேல் நியாயதிபதியாக இருக்கும் போது இஸ்ரவேல் ஜனங்கள் தங்களை ஆள புறஜாதிகளை போல ராஜா வேண்டும் என்று கேட்டார்கள். அதன் மூலம் சாமுவேல் மிகவும் துக்கப்பட்டு தேவனிடத்தில் தெரிவித்த போது, நான் அவர்களை ஆளாத படிக்கு என்னைத்தான் தள்ளினார்கள்(1சாமு.8:7). ஆகையால் நீ அவர்களுக்கு ராஜாவை ஏற்படுத்து என்று கூறினார்;. அதன் மூலம் முதன் முதலாக சவுல் இஸ்ரவேலின் மேல் ராஜாவாக தெரிந்து கொள்ளப்பட்டார்.
சவுல் கர்த்தரின் கட்டளைகளுக்கு கீழ்படியாததாலும், பொய் பேசினதனாலும், தேவன் அவனை தள்ளிவிட்டு, தாவீதை ராஜாவாக ஏற்படுத்தினார். தாவீது தேவனுடைய இருதயத்திற்கு ஏற்றவனாய், அவருக்கு பிரியமாய் ஆட்சி செய்தார். அதனிமித்தம் கர்த்தர் இஸ்ரவேலின் சிங்காசனத்தின் மேல் உட்காரும் புருஷன் தாவீதுக்கு இல்லாமற்போவதில்லை(1இரா.8:25) என்று வாக்கு கொடுத்தார். அந்த வாக்குதத்தத்தின் படி தாவீதுடைய நாட்களுக்கு பின்பு அவருடைய குமாரனாகிய சாலொமோன் சமஸ்த இஸ்ரவேலின் மேல் ராஜாவாக ஏற்படுத்தப்பட்டார். சாலொமோன் துவக்கத்தில் தேவனுக்கு பிரியமாக ஆட்சி செய்தாலும், பிற்பாடு அநேக புறஜாதி ஸ்தீரிகளை மனைவிகளாகவும், மறுமனையாட்டிகளாகவும் தெரிந்து கொண்டதால், அவர்கள் சாலொமோனுடைய இருதயத்தை தேவனை விட்டு வழுவிபோக பண்ணினார்கள். அவன் தன் தகப்பனாகிய தாவீதை போல ஆண்டவரை உத்தமாக பின்பற்றவில்லை. அதனிமித்தம் சாலொமோனின் நாட்களுக்கு பின்பு இஸ்ரவேல் தேசமானது வடபகுதி(இஸ்ரவேல்), தென்பகுதி(யூதா) என இரண்டாக பிரிந்தது. வடபகுதியில் பதினெட்டு ராஜாக்கள் தோன்றினார்கள். அவர்களில் தாவீதின் வம்சத்தில் யாரும் வரவில்லை. அவர்களில் அநேகர் தேவனை விட்டு தூரம் போய் பாகால்களை பின்பற்றினார்கள்.
தென் பகுதியில் பத்தொன்பது ராஜாக்கள் தோன்றினார்கள்;. அவர்கள் அனைவரும் தாவீதின் வம்சத்தில் தோன்றினவர்கள். அவர்களில் சில இராஜாக்கள் தேவனுக்கு பிரியமாகவும், சில ராஜாக்கள் தேவனுக்கு பிரியமில்லாமலும் ஆட்சி செய்தார்கள். யூதாவின் கடைசி ஐந்து ராஜாக்களும் தேவனை விட்டு மிகவும் தூரம் போய் ஆட்சி செய்தார்கள். யூதாவின் பதினேழாவது இராஜாவாகிய யோயாக்கீம்; கர்த்தருடைய பார்வைக்கு பொல்லாப்பானதை செய்தான்(2இரா.23:37). இவனுடைய ஆட்சியின் மூன்றாம் வருஷத்தில் கி.மு.606-ல் நேபுகாத்நேச்சார் எருசலேமை முற்றிகை போட்டான்(தானி:1:1). அப்பொழுது ஆண்டவர் யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீமையும் தேவனுடைய ஆலயத்தின் பாத்திரங்களில் சிலவற்றையும் இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே ராஜகுலத்தார்களிலும் துரைமக்களிலும் யாதொரு மாசும் இல்லாதவர்களும், அழகானவர்களும், சகல ஞானத்திலும் தேறினவர்களும், அறிவில் சிறந்தவர்களும், கல்வியில் நிபுணரும், ராஜாவின் அரமனையில் சேவிக்கத் திறமையுள்ளவர்களுமாகிய சில வாலிபரையும் அவன் கையில் ஒப்புக்கொடுத்தார். அப்பொழுதிலிருந்து எரேமியா தீர்க்கதரிசியின் வார்த்தையின் படி யூதாவின் எழுபது வருட பாபிலோனிய சிறையிருப்பு ஆரம்பமாகிறது(எரே.25:12).
நேபுகாத்நேச்சார் தேவனுடைய ஆலயத்தின் பாத்திரங்களை கொண்டு போய் சிநேயார்(பாபிலோன்) தேசத்திலுள்ள தன் தேவனுடைய கோவிலின் பண்டசாலைக்குள் வைத்தான். சிநேயார் தேசத்தின் முதல் ராஜா நிம்ரோத். பாபேல் கோபுரம் சிநேயார் தேசத்தில் தான் காணப்பட்டது(ஆதி.10:10).
யோயாக்கீம் மூன்று வருஷம் நேபுகாத்நேச்சாரை சேவித்து பின்பு அவனுக்கு விரோதாமாக கலகம் பண்ணினாhன். அவன் மரணமடைந்த பின்பு அவனுடைய மகனாகிய யோயாக்கீன் பதினெட்டாம் வயதில் ராஜாவாகி மூன்று மாதம் அரசாண்டான். இவனும் கர்த்ருடைய பார்வைக்கு பொல்லாப்பானதை செய்தான். பின்பு நேபுகாத்நேச்சார் அவனுக்கு விரோதமாய் வந்து அவனையும் அவன் தாயையும், அவன் ஊழியக்காரர்களையும், தேவனுடைய ஆலயத்தின் சகல பணிமுட்டுகளையும் சிறைபிடித்துக்கொண்டு பாபிலோனுக்கு போனான். அவனுடைய ஸ்தானத்தில் அவன் சிறிய தகப்பனாகிய மத்தனியாவை(சிதேக்கியா) ராஜாவாக வைத்தான். இவனும் கர்த்ருடைய பார்வைக்கு பொல்லாப்பானதை செய்தான். அவனுடைய ராஜ்யபாரத்தின் பதினொன்றாம் வருஷம் மீண்டும் நேபுகாத்நேச்சார் சகல இராணுவத்தோடும் இவனுக்கு விரோதமாக வந்து அவனுடைய குமாரர்களை அவன் கண்களுக்கு முன்பாக வெட்டி இவன் கண்களை குருடாக்கி பாபிலோனுக்கு சிறைப்பிடித்துக்கொண்டு போனான். கர்த்தருடைய ஆலயத்தையும், ராஜாவின் அரமனையையும், எருசலேமின் சகல கட்டடங்களையும், பெரிய வீடுகள் எல்லாவற்றையும் அக்கினியால் சுட்டெரித்து போட்டான்(2இரா.25:9).
உபாகமம் 28ஆம் அதிகாரத்தில் இஸ்ரவேல் ஜனங்களுக்கு முன்பாக கர்த்தர் ஆசிர்வாத்தையும் சாபத்தையும் வைத்தார். கர்த்தருடைய கற்பனைகளின் படி ஜீவித்தால் ஆசிர்வாதம், விட்டுவிட்டால் சாபம். அந்த அனேக சாபங்களில் சிறையிருப்பும் ஒன்று (உபா:28:32,50,51,52). எசேக்கியா இராஜாவும் மதியீனமாக தன்னுடைய பொக்கிஷ சாலைகள் அனைத்தையும் பாபிலோனிய ராஜாவுடைய அதிபதிகளுக்கு காண்பித்தான். அப்பொழுது ஏசாயா தீர்க்கதரிசி எசேக்கியாவை நோக்கி: கர்த்தருடைய வார்த்தையைக் கேளும். இதோ நாட்கள் வரும், அப்பொழுது உமது வீட்டில் உள்ளதிலும், உமது பிதாக்கள் இந்நாள்வரைக்கும் சேர்த்ததிலும் ஒன்றும் மீதியாக வைக்கப்படாமல் எல்லாம் பாபிலோனுக்குக் கொண்டுபோகப்படும். நீர் பெறப்போகிற உமது சந்தானமாகிய உமது குமாரர்களிலும் சிலர் பாபிலோன் அரமனையிலே அரமனை வேலைக்காரராயிருப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்(2இரா.20:12-19). தேவனுடைய இந்த வார்த்தைகளின்படியும், எரேமியா தீர்க்கதாசியினுடைய வார்த்தையின்படியும் யூதா ஜனங்கள் சிறைப்பட்டுபோனார்கள்.
நேபுகாத்நேச்சாரின் கட்டளை(தானி:1:4-7)
நேபுகாத்நேச்சார் தான் சிறைபிடித்துகொண்டு வந்த தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா என்ற நான்கு யூத வாலிபர்களுக்கும் கல்தேயரின் எழுத்தையும் பாஷையையும் கற்றுக்கொடுக்கவும், தான் உண்ணும் போஜனத்திலேயும் தான் குடிக்கும் திராட்சரசத்திலேயும் தினம் ஒரு பங்கை அவர்களுக்கு நியமித்து, அவர்களை மூன்றுவருஷம் வளர்க்கவும், அதின் முடிவிலே அவர்களை சோதிப்பதாகவும் பிரதானிகளின் தலைவனுக்கு கட்டளையிட்டான். பிரதானிகளின் தலைவன், தானியேலுக்கு பெல்தெஷாத்சார் என்றும், அனனியாவுக்கு சாத்ராக் என்றும், மீஷாவேலுக்கு மேஷாக் என்றும், அசரியாவுக்கு ஆபேத்நேகோ என்றும் மறுபெயரிட்டான்.
தானியேலுடைய தீர்மானம்(தானி.1:8)
தானியேலுக்கும் அவன் நண்பர்களுக்கும் இராஜாவின் அரண்மனையில் சேவிப்பதும், பெயரை மாற்றியதும் தவறாக தெரியவில்லை. ஒருவேளை அவர்கள் யோசேப்பின் சரித்திரத்தை வாசித்திருக்க கூடும். யோசேப்பு சாப்நாத்பன்னேயா என்ற பெயரோடு பார்வோனுடைய அரண்மனையில் சேவித்ததை அறிந்திருக்க கூடும். கல்தேயரின் பாஷையை கற்று கொள்வதும் தவறாக தெரியவில்லை. காரணம் மோசேயும் எகிப்தின் சகல சாஸ்திரங்களையும் கற்று வாக்கிலும் செய்கையிலும் வல்லவனாக காணப்பட்டான் என்பதையும் அறிந்திருப்பார்கள்.
ஆனால் இராஜாவின் போஜனமும், பானமும் தீட்டுள்ளது என்று ஒதுக்குகிறார்கள். காரணம் என்ன என்று எழுதப்படவில்லை. லேவி. 11-ல் தேவன் எவைகளை புசிக்க கூடாது என்று சொன்னரோ அவைகள் இராஜாவின் போஜனத்தில் காணப்பட்டிருக்கலாம். மாத்திரமல்ல இராஜாவின் போஜனமும் பானமும் பாபிலோனிய விக்கிரங்களுக்கு படைக்கப்பட்டபின்பு உண்பதாக கூட காணப்பட்டிருக்கலாம். தேவனுடைய கட்டளைகளை மீறுவது பாவம் என்பதை அறிந்து ராஜாவின் உணவுகளை வெறுத்திருக்கக்கூடும். ஆகையால் அந்த உணவுகளால் தங்களை தீட்டுப்படுத்தலாகாது என்று தீர்மானித்தார்கள். தீர்மானம் தானியேல் எடுத்தார் என்று எழுதப்பட்டிருந்தாலும் அது நான்கு பேருடைய தீர்மானமே. ஆகையால் தங்களை தீட்டுப்படுத்தாதபடி பிரதானிகளின் தலைவனிடத்தில் வேண்டிக்கொண்டார்கள்.
தானியேல் எடுத்த தீர்மானமே அவனுடைய பெயரை வேதத்தில் இடம் பெற செய்தது. சுமார் 2500 வருஷங்களுக்கு பின்பும் அவரைக்குறித்து தியானிக்கிறோம் என்றால் அவருடைய தீர்மானமே. அவர்களுடைய உறுதியான தீர்மானத்தினால் கர்த்தர் அவர்களுக்காக செயல்பட துவங்குகிறார்.
பிரதானிகளின் கண்களில் தானியேலுக்கு தயவு, இரக்கம்(தானி.1:9,10)
தேவன் தம்முடைய பிள்ளைகளுக்கு தயவு கிடைக்கப்பண்ணுகிறவர். கர்ததருடைய பார்வையில் நல்லவர்களாக காணப்படும் போது தேவதயவைவும், மனுஷ தயவையும் கொடுக்கிறவர். நல்லவன் கர்த்தரிடத்தில் தயை பெறுகிறான்(நீதி.12:2). தானியேலுக்கும், அவனுடைய நண்பர்களான சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோவுக்கும் பிரதானிகளின் கண்களில் தயவை கட்டளையிட்hர்.
யோசேப்பு போத்திபாரின் மனைவியின் மூலமாக தவறாக குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட போது கர்த்தர் யோசேப்போடு இருந்த படியால் சிறைச்சாலைத்தலைவனுடைய கண்களில் தயவு கிடைக்க செய்து சிறைசாலையிலே தலைவனாக உயர்த்தப்படுகிறார் (ஆதி.39:21). கர்த்தர் எகிப்திய ஜனங்களின் கண்களில் இஸ்ரவேல் ஜனங்களுக்கு தயவு கிடைக்க பண்ணினதால், இஸ்ரவேல் ஜனங்கள் கேட்;ட பொன், வெள்ளியை கொடுத்தர்கள்.
பிரதானிகளின் கண்களில் தானியேலுக்கு தயவு கிடைத்தாலும், பிரதானி; நேபுகாத்நேச்சாருக்கு பயப்படுகிறான். உங்கள் முகங்கள் வாடிப்போனால் ராஜா என்னை சிரச்சேதம் பண்ணுவாரே என்று அவன் கலங்குகிறான்.
பத்து நாட்கள் சோதனை(தானி:1:11-13)
தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா என்பவர்கள்மேல் விசாரிப்புக்காரனாக வைக்கப்பட்ட மேல்ஷார் என்பவனை பார்த்து கூறுகிறார்கள் பத்துநாள்வரைக்கும் உமது அடியாரைச் சோதித்துப்பாரும். எங்களுக்குப் புசிக்கப் பருப்பு முதலான மரக்கறிகளையும், குடிக்கத் தண்ணீரையும் கொடுத்து, எங்கள் முகங்களையும் ராஜபோஜனத்தில் புசிக்கிற வாலிபருடைய முகங்களையும் ஒத்துப்பாரும். பின்பு நீர் காண்கிறபடி உமது அடியாருக்குச் செய்யும்;. அவன் இந்தக் காரியத்திலே அவர்களுக்குச் செவிகொடுத்து, பத்துநாளளவும் அவர்களைச் சோதித்துப்பார்த்தான்.
தானியேலுக்கும், அவன் நண்பர்களுக்கும் கர்த்தர் நிச்சயம் உதவி செய்வார் என்ற விசுவாசம் காணப்பட்டது. ஆகையால் தான் பத்து நாட்கள் சோதித்து பார்க்கும் படிக்கு நம்பிக்கையோடு கூறுகிறார்கள். இந்த நான்கு வாலிபருடைய ஐக்கியம், ஒருமனப்பாடு அவர்களை விசுவாச வீரர்களாக மாற்றுகிறது.
பிரதானிகளின் தலைவனாகிய அஸ்பேனாசுவின் விசாரிப்புகாரனாகிய மேல்ஷார் பத்துநாள்கள் அவர்களை சோதித்து பார்த்த பின்பு ராஜபோஜனத்தைப் புசித்த எல்லா வாலிபரைப் பார்க்கிலும் அவர்கள் முகம் களையுள்ளதாயும், சரீரம் புஷ்டியுள்ளதாயும் காணப்பட்டது. தேவன் அப்பத்தையும், தண்ணீரையும் ஆசீர்வதிக்கிறவர் (யாத்:23:35).
அவர்களுடைய சரீரம் புஷ்டியாக காணப்பட்டதை கண்ட மேல்ஷார், அவர்கள் புசிக்கக் கட்டளையான போஜனத்தையும், அவர்கள் குடிக்கக் கட்டளையான திராட்சரசத்தையும் நீக்கிவைத்து, அவர்களுக்குப் பருப்பு முதலானவைகளைக் கொடுத்தான்.
விசேஷித்த கிருபை(தானி.1:17)
இந்த நாலு வாலிபருக்கும் தேவன் சகல எழுத்திலும் ஞானத்திலும் அறிவையும் சமார்த்தியத்தையும் கொடுத்தார். இந்த ஞானமும், அறிவும் பாபிலோனிய கல்வியை கற்றதினாலோ அல்லது அவர்களுடைய உணவினாலோ வந்தது அல்ல. தேவனுக்கு பயந்து அசுத்தத்திற்கு விலக தீர்மானித்ததினால் தேவன் கிருபையாய் கொடுத்தது. கர்த்தருக்கு பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம். பரிசுத்தரின் அறிவே அறிவு(நீதி.9:10).
தாவீது கூறுகிறார், நீர் உம்முடைய கற்பனைகளைக் கொண்டு என்னை என் சத்துருக்களிலும் அதிக ஞானமுள்ளவனாக்குகிறீர், அவைகள் என்றைக்கும் என்னுடனே இருக்கிறது. உம்முடைய சாட்சிகள் என் தியானமாயிருக்கிறபடியால், எனக்குப் போதித்தவர்களெல்லாரிலும் அறிவுள்ளவனாயிருக்கிறேன். உம்முடைய கட்டளைகளை நான் கைக்கொண்டிருக்கிறபடியால், முதியோர்களைப்பார்க்கிலும் ஞானமுள்ளவனாயிருக்கிறேன்(சங்.119.98-100).
ஞானம், அறிவுவோடு அவர்களுக்கு சாமர்த்தியத்தையும்(யடிடைவைல) கொடுத்தார். சாமர்த்தியம் என்றால் எந்த காரியத்தையும் செய்ய தேவையான திறமை ஆகும். சாமர்த்தியத்தை நமக்கு தருபவர் கர்த்தர். நோவா பேழையை செய்யும் போது அதை செய்வதற்குரிய திறமையை கொடுத்தவர் கர்த்தர். நோவாவால் இவ்வளவு மிருகங்கள், பறவைகளை பாதுகாக்க கூடிய பேழையை எப்படி உருவாக்கியிருக்க கூடும். தேவன் அதற்குரிய சாமர்த்தியத்தை கொடுக்கும் போது காரியங்களை லகுவாக செய்து முடிக்கலாம்.
தானியேலுக்கு இரண்டு மடங்கு ஆசீர்வாதம்
தானியேலுக்கு ஞானமும், அறிவும் மாத்திரமல்ல. சகல தரிசனங்களையும், சொப்பனங்களையும் அறியதக்க அறிவையும் கூட்டி கொடுத்தார். உங்களுக்குள் ஒருவன் தீர்க்கதரிசியாயிருந்தால், கர்த்தராகிய நான் தரிசனத்தில் என்னை அவனுக்கு வெளிப்படுத்தி, சொப்பனத்தில் அவனோடே பேசுவேன்(எண்.12:6). கர்த்தர் தானியேலுக்கு தீர்க்கதரிசன கிருபையை கொடுத்து மகிமையான ஊழியத்திற்கு அவனை தெரிந்து கொண்டார். தானியேலின் புஸ்தகம் தானியேலை தீர்க்கதரிசி என்று அழைக்கவில்லை. ஆனால் இயேசு மத்.25:15-ல் தானியேலை தீர்க்கதரிசி என்று அழைக்கிறார்.
பத்து மடங்கு சமர்த்தர்கள்(தானி.1:18-20)
ராஜாவினிடத்தில் கொண்டுவருகிறதற்குக் குறித்த நாட்கள்(மூன்று வருஷம்) நிறைவேறினபோது, பிரதானிகளின் தலைவன் அவர்களை நேபுகாத்நேச்சாருக்கு முன்பாக கொண்டுவந்து விட்டான். ராஜா அவர்களோடே பேசினான். அவர்கள் எல்லாருக்குள்ளும் தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா என்பவர்களைப்போல வேறொருவரும் காணப்படவில்லை. ஆகையால் இவர்கள் ராஜசமுகத்தில் நின்றார்கள்.
ஞானத்துக்கும் புத்திக்கும் அடுத்த எந்த விஷயத்தில் ராஜா அவர்களைக் கேட்டு விசாரித்தானோ, அதிலே தன் ராஜ்யம் எங்குமுள்ள சகல சாஸ்திரிகளிலும் ஜோசியரிலும் அவர்களைப் பத்து மடங்கு சமர்த்தராக கண்டான்.
தானியேலும், அவன் நண்பர்களும் எடுத்த தீர்மானம் ஒன்று. ஆனால் தேவன் அவர்களுக்கு தயவையும் இரக்கத்தையும் கிடைக்கப்பண்ணினார். முககளையையும், சரீரபுஷ்டியை கொடுத்தார். ஞானத்தையும், அறிவையும் கொடுத்தார், சொப்பனங்களை அறியும் கிருபையை கொடுத்தார். மாத்திரமல்ல பத்து மடங்கு சமர்த்தராக மாற்றினார். ஓரே தீர்மானம், பத்து மடங்கு ஆசிர்வாதம்.
கோரேஸ் ராஜா(தானி.1:21)
கோரேஸ் என்ற பெர்சிய ராஜா ராஜ்யபாரம்பண்ணும் முதலாம் வருஷமட்டும் தானியேல் அங்கே இருந்தான். நேபுகாத்நேச்சார் சிறைபிடித்து வந்தபின்பு எரேமியா தீர்க்கதரிசியின் வார்த்தையின்படி 70 வருஷமும் (கி.மு.606 முதல் கி.மு536 வரை), அதன் பின்பு மேதியனாகிய தரியுவின் நாட்களிலும், பெர்சியனாகிய கோரேஸ் ராஜாவின் ஆட்சியின் முதலாம் வருஷம் மட்டும் தானியேல் பாபிலோனில் இருந்தான். இந்த கோரேஸ் ராஜாவின் நாட்களில் தான், தேவன் அவனுடைய ஆவியை ஏவினதாலே, நேபுகாத்நேச்சாரால் இடித்துபோடப்பட்ட எருசலேம் தேவஆலயத்தை திரும்ப கட்ட செருபாபேலின் தலைமையின் கீழ் ஜனங்கள் அனுப்பப்பட்டார்கள்(2 நாளாகமம் 36:22-23, எஸ்றா 1:1-4). எரேமியா 29:10-ல் "பாபிலோனிலே எழுபதுவருஷம் நிறைவேறினபின்பு நான் உங்களைச் சந்தித்து, உங்களை இவ்விடத்துக்குத் திரும்பிவரப்பண்ணும்படிக்கு உங்கள் மேல் என் நல்வார்த்தையை நிறைவேறப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்" என்ற வார்த்தை கோரேஸ் ராஜாவின் நாட்களில் நிறைவேறினது.
0 Comments