சீஷத்துவம்
2. எல்லாவற்றையும் வெறுத்துவிடல்
அப்படியே உங்களில் எவனாகிலும் தனக்கு
உண்டானவைகளையெல்லாம் வெறுத்து விடாவிட்டால் அவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான் (லூக்கா. 14:33).
கர்த்தராகிய இயேசுவுக்கு சீஷனாயிருக்க ஒருவன் தனக்குள்ள அனைத்தையு
ம் வெறுத்துவிடவேண்டும். இரட்சகர் உரைத்ததன் தெளிவான பொருள் இதுதான். இத்தகைய கடுமையான நிபந்தனையை நாம் எவ்வளவுதான் எதிர்த்தாலும், இத்தகைய நிறைவேற்றமுடியாததும் விவேகமற்றதுமான கொள்கைளை எப்படித்தான் ஏற்க மறுத்தாலும் இது கர்த்தருடைய வார்த்தை. இவ்வாறு பொருள்படும்படியே அவர் பேசினார் என்ற உண்மையை மாற்றிவிட முடியாது.
சற்றும் வளைந்து கொடுக்காத இவ்வுண்மைகளைத் தொடக்கத்திலேயே நாம் சந்திக்க வேண்டும்.
1. இயேசுவானவர் இந்த நிபந்தனையை விதித்தது ஏதோ ஒரு குறிப்பிட்ட, தெரிந்தெடுக்கப்பட்ட கிறிஸ்தவ தொண்டர் குழுவிற்கு அல்ல. உங்களில் எவனாகிலும்........ வெறுத்துவிடாவிட்டால் ............... என்றார் அவர்.
2. நாம் எல்லாவற்றையும் வெறுத்துவிட மனதுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று அவர் சொல்லவில்லை. உங்களில் எவனாகிலும்.............. வெறுத்துவிடாவிட்டால் என்பதுதான் அவர் கூறியது.
3. நமக்குள்ளவற்றில் ஒரு பகுதியை மட்டும் விட்டுவிட்டால் போதும் என்று அவர் உரைக்கவில்லை. உங்களில் எவனாகிலும் தனக்குண்டானவைகளையெல்லாம் வெறுத்துவிடாவிட்டால் என்பதுதான் அவரது திருவாக்கு.
4. தன் செல்வத்தின்மேல் பற்றுக்கொண்டிருக்கும் ஒருவன் ஏதோ ஒருவித கலப்படமான சீஷத்துவத்தை மேற்கொள்ளக்கூடும் என்று அவர் கற்பிக்கவில்லை. ................ அவன் எனக்குச் சீஷனாயிருக்க மாட்டான் என்று இயேசுவானவர் திட்டமாகக் கூறிவிட்டார்.
உண்மையில் இந்த வரையறையற்ற நிபந்தனையைக் கண்டு திருமறையில் இதைப்போன்ற கண்டிப்பான வேறென்றுமில்லை என்பது போல் நாம் ஆச்சரியப்பட வேண்டியதில்லை.
மத்தேயு. 6:19-20ல், பூமியிலே உங்களுக்கு பொக்கிஷங்களை சேர்த்து வைக்கவேண்டாம், இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக்கெடுக்கும். இங்கே திருடரும் கன்னமிட்டுத்திருடுவார்கள், பரலோகத்திலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவையுங்கள். அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதுமில்லை. அங்கே திருடர் கன்னமிட்டுத் திருடுகிறதுமில்லை என்று இயேசுவானவர் கூறவில்லையா?
விபச்சாரத்தையும், கொலையையும் நமது ஆண்டவர் தடுத்ததுபோலவே பூமியில் செல்வத்தைச் சேர்த்து வைப்பதையும் தடை செய்திருக்கிறது என்று வெஸ்லி சரியாகக கூறினார்.
உங்களுக்கு உள்ளவைகளை விற்று பிச்சை கொடுங்கள்.......... என்று லூக்கா. 12:33ல் இயேசு சொல்லவில்லையா?
உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்றுத் தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும். பின்பு என்னைப் பின்பற்றி வா என்று அவர் தம்மிடம் வந்த செல்வந்தனான இளந்தலைவனுக்கு அறிவுரை கூறவில்லையா? லூக்கா. 18:22.
அவர் இந்த அர்த்தத்தோடு பேசவில்லையென்றால் அவர் கூற்றின் பொருள்தான் என்ன?
ஆதிச்சபை விசுவாசிகள் தங்கள் காணியாட்சிகளையும் ஆஸ்திகளையும் விற்று, ஒவ்வொருவருக்கும் தேவையானதற்குத் தக்கதாக அவைகளில் எல்லாருக்கும் பகிர்ந்து கொடுத்தார்கள் (அப். 2:45). என்பது உண்மையல்லவா?
இயேசுக்கிறிஸ்துவைப் பின்பற்ற எல்லாவற்றையும் உதறித்தள்ளியது தேவனுடைய விசுவாசிகளில் பலரைப் பொறுத்த அளவில் உண்மையல்லவா?
பூமியில் செல்வத்தைத்திரட்டி வைப்பதைத் தாங்கள் நிறுத்திவிட வேண்டுமென்றும், தங்களுக்குக் கிடைத்த கணிசமான வருமானம் முழுவதையும் கர்த்தருடைய ஊழியத்திற்காக அர்ப்பணிக்கவேண்டுமென்றும் அந்தோணி நாரிஸ் குரோவ்ஸ் என்பாரும் அவரது மனைவியாரும் உறுதியாக உணர்த்தப்பட்டனர். இவர்கள் பாக்தாக் நகருக்குச் சென்ற மிஷனெரிகள்.
சி.டி ஸ்டட் என்பவர் செல்வந்தனான அந்த இனத்தலைவன் செய்யத் தவறினதை நிறைவேற்றுவதற்கான பொன்னான வாய்ப்பைப் பெறவும், தம் செல்வம் அனைத்தையும் கிறிஸ்துவுக்கு அர்ப்பணிக்கவும் தீர்மானித்தார்......... தேவனுடைய வார்த்தையில் காணப்படும் மிகத்தெளிவான கூற்றுக்கள் நிறைவேற்றிய எளிய கீழ்படிதலே அது. கர்த்தருடைய வேலைக்காக ஆயிரக்கணக்கான தொகையைப் பகிர்ந்து கொடுத்துவிட்டபின் 45,000 ரூபாயைத் தாம் திருமணம் புரிய இருந்த பெண்ணுக்காக ஸ்டட் வைத்து வைத்தார். அப்பெண்மணி அவருக்கு எந்தவிதத்திலும் குறைந்தவரல்ல. சார்லி, அந்தச் செல்வந்தனான வாலிபனை கர்த்தர் என்ன செய்யச்சொன்னார்? இது அம்மையாரின் கேள்வி.
எல்லாவற்றையும் விற்றுவிடு என்றார்.
சரி அப்படியானால், எல்லாவற்றையும் கொடுத்துவிட்டு, கர்த்தரை நம்பி நம் குடும்ப வாழ்க்கையைத் தொடங்குவோம். ஆகவே மீதியாக இருந்த அந்தத் தொகையும் கூட கிறிஸ்தவ ஊழியத்திற்குக் கொடுக்கப்பட்டது.
ஜிம் எலியட் என்ற மனிதனை உயிர்ப்பித்ததும் இத்தகைய அர்ப்பணிக்கும் ஆவிதான். அவர் எழுதினதாவது:
பிதாவே நிலையற்ற எல்லாவற்றின் மேலும் உள்ள என் பிடி தளரத்தக்கவாறு நான் பெலனற்றவனாகட்டும், என் வாழ்க்கை, என் மதிப்பு, என் உடைமைகள் இவற்றை இறுகப் பற்றுகிற என் கையின் வலிமையை, கர்த்தாவே, நான் இழந்து விடட்டும்........... கிறிஸ்துவின் கரங்கள் திறக்கப்பட்டதுபோல என் கைகளும் கல்வாரியின் ஆணிகளை ஏற்கத் திறக்கப்படட்டும். இவ்வாறு நான் எல்லாவற்றையும் வி;ட்டுவிடுவதால் இப்போது என்னைக் கட்டியுள்ள எல்லாவற்றிலிருந்தும் நான் விடுதலையாகட்டும். விண்ணுலகத்தை, இறைவனுக்குச் சமமாயிருப்பதைத் தனக்கென்று பிடித்து வைத்துக்கொள்ளக் கூடிய தொன்றாக அவர் கருதவில்லை. எனவே என் பிடியும் தளரட்டும்.
கர்த்தர் உரைத்தவற்றை அப்படியே எடுத்துக் கொள்ளுதல் முடியாததொன்று என்று அவிசுவாசம் குடிகொண்டுள்ள நம் உள்ளங்கள் விளம்புகின்றன. எல்லாவற்றையும் விட்டுவிட்டால் பட்டினி கிடப்போமே. என்னதான் சொன்னாலும் நமக்கும் நம்மைச் சார்ந்துள்ளோருக்கும் வருங்காலத்திற்குத் தேவையானவற்றைத் தேடி வைக்க வேண்டுமே, கிறிஸ்தவர்கள் எல்லோருமே தங்களுக்குள்ள எல்லாவற்றையும் வெறுத்துவிட்டால் கர்த்தருடைய வேலைக்கு யார் பணம் கொடுப்பார்கள்? செல்வந்தரான கிறிஸ்தவர்கள் சிலர் கூட இல்லாமற்போனால் உயர் வகுப்பு மக்களுக்குக் கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிப்பதெப்படி? இவ்வாறு விவாதங்கள் ஒவ்வொன்றாக விரைந்து வருகின்றன. எதற்காக? ஆண்டவர் சொன்னவற்றின் பொருள் வேறு என்று நிரூபிக்கத்தானே?.
கர்த்தருடைய கட்டளைக்குக் கீழ்ப்படிவதுதான் அறிவுள்ள, நியாயமான வாழ்க்கை. மிக்க மகிழ்ச்சியை நல்குவதும் இதுவே. கிறிஸ்துவுக்காகத் தியாகம் செய்து வாழ்கிற ஒருவரும் குறைவுபட்டு வாடுவதில்லை என்பது வேதாகமச் சான்று. அநுபவத்தின் சாட்சியும்கூடி, ஒரு மனிதன் கடவுளுக்குக் கீழ்ப்படியும்போது அவனுடைய தேவைகள் அனைத்தையும் கர்த்தர் பார்த்துக் கொள்ளுகிறார்.
கிறிஸ்துவின் பின்னே செல்வதற்காகத் தனக்குள்ள அனைத்தையும் விட்டுவிடுகிறவன் பிற கிறிஸ்தவர்களின் ஆதரவை நாடி வாழும் பரம ஏழை அல்ல..
1. அவன பாடுபட்டு உழைக்கிறவன். தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் உள்ள அன்றாடத் தேவைகளை நிறைவாக்க நன்கு வேலை செய்கிறான்.
2. அவன் சிக்கனமாக வாழ்கிறவன். துன் உடனடியான தேவைகளுக்கு மிஞ்சின எல்லாவற்றையும் கர்த்தருடைய வேலைக்குக் கொடுக்கத்தக்கதாக வீண் செலவை விலக்குகிறான்.
3. அவன் விவேகமுள்ளவன். பூமியில் பொருளைச் சேர்த்து வைக்காமல் பரலோகத்தில் பொக்கிஷம் சேர்க்கிறான்.
4. அவன் வருங்காலத்திற்காகக் தேவனை நம்புகிறவன். தன் வாழ்க்கையின் மிக உயர்ந்த பருவத்தையும் பலத்தையும் முதுமைக்குப் பாதுகாவலாகப் பெரும் பொருளை ஈட்டி வைப்பதில் செலவிடாமல், கிறிஸ்துவின் சேவைக்குப் படைத்துவிட்டு வருங்காலத் தேவைகளுக்கு அவரை நம்புகிறான். கடவுளுடைய இராஜ்ஜியத்;தையும் அவருடைய நீதியையும் தான் முதலாவது தேடினால் தனக்கு உணவும் உடையும் ஒருபோதும் குறைவுபடாது என்பதை அவன் நம்புகிறான். (மத். 6:33).
துன்ப காலத்தில் உதவவேண்டுமென்று செல்வம் சேர்த்து வைப்பதை இத்தகைய மனிதன் நியாயமானதொன்றாகக் கருதுவதில்லை. தன் கருத்தை நிலைநாட்ட அவன் கூறுவனவற்றைக் கேட்போம்:
1. ஆத்துமாக்களின் இரட்சிப்புக்காக இன்றைக்குப் பயன்படுத்தக் கூடிய தொகையை நாம் எவ்வாறு மனதார மறைத்து வைப்பது?. ஓருவன் இவ்வுலக ஆஸ்தி உடையவனாயிருந்து, தன் சகோதரனுக்குக் குறைச்சல் உண்டென்று கண்டு, தன் இருதயத்தை அவனுக்கு அடைத்துக் கொண்டால், அவனுக்குள் தேவ அன்பு நிலைதொள்ளுகிறதெப்படி? (1யோவான்.3:1). உன்னில் நீ அன்புகூருவதுபோல பிறரிலும் அன்பு கூருவாயாக (லோவி. 18:19) என்ற முக்கிய கட்டளையைச் சிந்தித்துப் பாருங்கள். நம் தேவைக்கு மிஞ்சினது நம்மிடம் இருக்கையில் உணவின்றி வருந்தும் அயலான் ஒருவனுக்கு ஒன்றும் கொடுத்து உதவாவிட்டால் நம்மில் அனபுகூருவதுபோல் அவனிலும் அன்புகூருகிறோம் என்று கூறமுடியுமா? தேவனுடைய சொல்லிமுடியாத ஈவை அறிந்து மகிழும் பேற்றினைப் பெற்றுள்ளோரைக் கேட்கிறேன். இந்த அறிவைக் கொடுத்துவிட்டு அதற்கு ஈடாக வேறு எந்த செல்வத்தையாகிலும் பெற விரும்பிவீர்களா? அப்படியானால் இந்தப் பரிசுத்தமாக்கும் அறிவையும், பரலோக ஆறுதலையும் பிறர் அடைவதற்கான வழிவகைகளை நாம் தடை செய்யாதிருப்போமாக. இது ஏ. என். குரோவ்ஸ் என்பவர் கூறுவது.
2. கிறிஸ்துவின் வருகை சமீபித்துள்ளது என்பதை நாம் உண்மையாக நம்புவோமானால் நம் பணத்தை உடனடியாகப் பயன்படுத்த விழைவோம். இல்லாவிட்டால் நித்திய நன்மைக்காகப் பயன்பட்டிருக்கக்கூடிய அத்தொகை பிசாசின் கையில் அகப்பட்டுவிடும்
3. கிறிஸ்துவின் சேவைக்காகக் செலவிடப்படக் கூடிய பொருள் நம்மிடமேயிருந்தும் அதைக் கொடுக்க நாம் மனமற்றிருந்தால் எப்படி ஊழியத்திற்கான செலவுத் தொகையை மனதாரக் கர்த்தரிடம் கேட்டு வேண்டுதல் செய்யமுடியும்? கிறிஸ்துவுக்காக யாவற்றையும் அர்ப்பணித்தல் மாய்மாலமாய் ஜெபிக்காதபடி நம்மைக் காக்கிறது.
4. சத்தியத்தின் இதைப்போன்ற சில பகுதிகளுக்கு நாம் கீழ்ப்படியாதவர்களாயிருந்தால் நாம் எப்படி தேவனுடைய முழு ஆலோசனையையும் பிறருக்கு அறிவிக்க முடியும்? நாம் பேசாதபடி நம் வாழ்க்கையே நம்மைத் தடுக்கும்.
5. வருங்காலத்திற்காக வெகு பொருள் திரட்டி வைக்கின்றனர் சாமர்த்தியசாலிகள். இது விசுவாசித்து நடப்பதல்ல. தரிசித்து நடத்தல். தேவனைச் சார்ந்து நிற்கும் வாழ்க்கைக்கே கிறிஸ்தவன் அழைக்கப்படுகிறான். அவன் பூமியில் பொக்கிஷம் சேர்க்கிறவனாயிருந்தால் உலகத்தினின்று அதன் வழிகளினின்றும் அவன் எவ்விதத்தில் வேறுபட்டவன் ஆவான்?
பெற்றோருக்குப் பிள்ளைகளல்ல, பெற்றார்களே பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்க வேண்டும் (1.கொரி. 12:14).
ஓருவன் தன் சொந்த ஜனங்களையும், விசேஷமாகத் தன் வீட்டாரையும் விசாரியாமற்போனால் அவன் விசுவாசத்தை மறுதலித்தவனும், அவிசுவாசியிலும் கெட்டவனுமாயிருப்பான் (1.தீமோ. 5:8).
இவ்வசனங்களைக் கருத்தூன்றிப் படித்தால், இவை எதிர்காலத்தில் ஏற்படும் நிச்சயமில்லாத செலவுகளைப்பற்றியல்ல, இப்போதைய தேவைகளைப்பற்றியே பேசுகின்றன என்பது புலனாகும்.
முதல் வசனத்தில் பவுல் எதிரிடையாகப் பொருள்படுமாறு பேசுகிறார். அவர் தந்தை. கொரிந்தியர் அவருடைய பிள்ளைகள். செலவைப் பொறுத்த அளவில் ஆண்டவருடைய ஊழியனாக அவர்களுக்குப் பாரமாயிருக்கக் கூடிய உரிமை அவருக்கிருந்த போதிலும் அவர் அவ்வாறு இருக்கவில்லை. அவர்தான் விசுவாசத்தில் அவர்கள் தந்தை. பொதுவாகப் பெற்றோருக்குப் பிள்ளைகளல்ல, பிள்ளைகளுக்குப் பெற்றோர்தான் வேண்டியவற்றைக் கொடுக்கவேண்டும். இது, பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் வருங்காலத்திற்காகச் சேர்த்து வைப்பதைப்பற்றியதே அல்ல. பவுலின் உடனடியான தேவைகளை நிறைவாக்குவதைப்பற்றி இவ்வாக்கியம் அடங்கிய பகுதி பேசுகிறதேயல்லாமல், வருங்காலத்தில் அவருக்கு ஏற்படக்கூடிய தேவைகளைப்பற்றி அது பேசுவதில்லை.
1தீமோ. 5:8ல் வறியவர்களான விதவைகளைப் பராமரிப்பதைப் பற்றி அப்போஸ்தலன் பேசுகிறார். அவர்களைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பு அவர்கள் உறவினருடையது என்று அவர் வலியுறுத்துகின்றார். உறவினர்கள் இல்லாவிட்டாலோ, அல்லது அவர்கள் தங்கள் பொறுப்பை நிறைவேற்றத் தவறிவிட்டாலோ அந்தக் கிறிஸ்தவ விதவைகளை உள்ளுர்ச்சபை பராமரிக்கவேண்டும். இங்கும் கூடப் பேச்சு நிகழ்காலத்தைப் பற்றியதே அல்லாமல் எதிர் காலத்துக்கு வேண்டியவற்றைப் பற்றியதல்ல.
கிறிஸ்துவின் உடலின் உறுப்பினர் தங்கள்; உடன் விசுவாசிகளின் உடனடித்தேவைகளை நிறைவாக்குதல் வேண்டும் என்பதே தேவனின் சீரியநோக்கம். எப்படியெனில், மிகுதியாய்ச் சேர்த்தவனுக்கு அதிகமானதுமில்லை, கொஞ்சமாய்ச் சேர்த்தவனுக்குக் குறைவானதுமில்லை என்று எழுதியிருக்கிற பிரகாரம், சமநிலைப் பிரமாணத்தின்படியே அவர்களுடைய செல்வம் உங்களுடைய வறுமைக்கு உதவுவதாக (2கொரி. 8:14-15).
வருங்காலத் தேவைகளுக்காகச் சேர்த்துவைக்க வேண்டுமென்று எண்ணுகிற கிறிஸ்தவன் எவ்வளவு சேர்த்துவைக்க வேண்டுமென்ற கடினமான பிரச்சனையைச் சந்திக்கின்றான். எனவே, எவ்வளவு என்று தீர்மானிக்கமுடியாத செல்வத்தைத் தேடுவதில் தன் வாழ்க்கையை அவன் செலவிடுகிறான். இது அவன் தன்னிலுள்ள மிகஉயர்ந்ததை கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்துவுக்குப் படைக்கும் வாய்ப்பை இழக்கச் செய்கிறது. வீணாக்கப்பட்ட ஒரு வாழ்க்கையின் இறுதியை அவன் அடையும்போது தான் முழுமனதோடே இரட்சகருக்கென்று வாழ்ந்திருந்தால் தன் தேவைகள் யாவும் எப்படியாவது நிறைவாக்கப்பட்டிருக்கும் என்று கண்டறிகிறான்.
கிறிஸ்தவர்கள் அனைவரும் கர்த்தராகிய இயேசுவின் சொற்களை அப்படியே ஏற்றுக்கொண்டால் கர்த்தருடைய ஊழியத்திற்குப் பணத்தட்டுப்பாடே இராது. கிறிஸ்துவின் நற்செய்தி அளவிலும் ஆற்றலிலும் அதிகப்பட்ட மக்களை அணுகும். ஓரு குறிப்பிட்ட சீஷன் குறைவுள்ளவனாயிருந்தால் பிற சீஷர்கள் தங்களிடம் உள்ளவற்றை அவனோடு பகிர்ந்து கொள்ளுதல் அவர்கள் பெறும் சிலாக்கியமும் மகிழ்ச்சியுமாகும்.
உலகத்தின் தனவந்தர்களை அணுக கிறிஸ்தவர்களிடையேயும் தனவந்தர்கள் அவசியம் என்று கூறுவது அறிவுடமையாகாது. உரோமப் பேரரசின் அரண்மனையிலுள்ளவர்களைப் பவுல் சிறையிலிருந்து கொண்டே ஆதாயப்படுத்தினார் (பிலி. 4:22). கடவுளுக்கு நாம் கீழ்ப்படிந்தால் காரியங்களை ஆண்டு நடத்தும் பொறுப்பை அவரிடம் விட்டுவிடலாம்.
இந்த விஷயத்தில் கர்த்தராகிய இயேசுவின் முன் மாதிரி முடிவானது வேலையாள் தலைவனைக் காட்டிலும் உயர்ந்தவனல்ல. தன் ஆண்டவர் வறியவராகவும், அசட்டை பண்ணப்பட்டவராகவும், இகழப்பட்டவராகவும் இருந்த இவ்வுலகத்தில் அவருடைய வேலைக்காரன் செல்வந்தனாகவும், பெரியவனாகவும், மதிக்கப்பெற்றவனாகவும் இருக்க நாடுதல் தகுதியுடையதல்ல என்றார் ஜார்ஜ் முல்லர்.
கிறிஸ்துவின் பாடுகளில் வறுமையும் அடங்கியிருந்தது (1கொரி. 8:9). வறுமை என்றால் கந்தைத் துணியும் அழுக்குமல்ல. சேமிப்பையும், ஆடம்பர வாழ்க்கைக்கான வழிவகைகளையும் அகற்றிவிடுவதே. ஏழைகளாய் இருந்திராவிட்டால் அவர்கள் செய்ய வேண்டியதாயிருந்த வேலையை நிறைவேற்றியிருக்க முடியாது என்று ஆண்ரு மரே என்பார் சுமார் முப்பது ஆண்டுகளுக்குமுன் சுட்டிக்காட்டினார். பிறனை மேலே உயர்த்த விரும்பும் ஒருவன் கீழே இறங்கவேண்டும். சமாரியனைப்போல மனித இனத்தின் பெரும்பான்மையோர் எப்போதும்போல இப்போதும் ஏழைகளாகவே இருக்கின்றனர். என்று ஏ.என். குரோவ்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
குடும்ப வாழ்க்கைக்குச் சில குறிப்பிட்ட பொருள்கள் அவசியமானவை என்று மக்கள் கூறுகின்றனர். அது உண்மையே.
கிறிஸ்தவ வணிகர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை முதலாக வேண்டும் என்று சொல்லுவதும் சரிதான்.
மோட்டார் வண்டியைப்போன்று, தேவனுடைய மகிமைக்காக உபயோகப்படுத்தப்படக் கூடிய உடைமைகள் இருக்கின்றனவே என்று சிலர் வாதாடுகின்றனர். அதுவும் கூட மெய்தான்.
ஆனால் இந்த நியாயமான தேவைகளுக்கு அப்பால் கிறிஸ்தவன் சுவிசேஷம் பரவுவதற்காகச் சிக்கனமாகவும் தியாக உணர்வோடும் வாழவேண்டும். ஏ.என். குரோவ்ஸ் கூறியபடி கடினமாய் உழை, குறைவாகச் செலவு செய். மிகுதியாக - எல்லாவற்றையுமே -- கிறிஸ்துவுக்குக் கொடு என்பதே அவனுடைய குறிக்கோளாக இருக்கவேண்டும்.
எல்லாவற்றையும் விட்டுவிடுதல் என்றால் என்ன என்பதுபற்றித் தீர்மானிக்கும் பொறுப்பு தேவனுக்கு முன்பாக நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது. ஒரு விசுவாசி இன்னொரு விசுவாசிக்கு வரையறை குறிக்க முடியாது. ஒவ்வொருவரும் கர்த்தர் தங்களுக்குச் சொல்லுகிறபடி செய்யவேண்டும். இந்தக்காரியம் மிகப்பெரிய அளவில் தனித்தனி ஆட்களைப் பொறுத்தது.
ஒருவன் இதுகாறும் தான் அறிந்திராத விதத்தில் தன்னை அர்ப்பணிக்க ஆண்டவரால் ஏவப்பட்டால் அவன் பொருமையடைய இடமில்லை. நாம் எவ்வளவுதான் தியாகம் செய்தாலும், அதைக் கல்வாரியின் வெளிச்சத்தில் நாம் காணும்போது, அது தியாகமே அல்ல. மேலும் எவ்விதத்திலும் நாம் பிடித்து வைத்துக்கொள்ளக் கூடாததைத்தான் நாம் கொடுத்துவிடுகிறோம்.
தான் இழக்க முடியாத ஒன்றைப் பெறுவதற்காகத் தான் பிடித்து வைத்துக்கொள்ளக்கூடாத ஒன்றைக் கொடுத்து விடுகிறவன் அறிவற்றவன் அல்ல என்றார் ஜிம் எலியட்.
0 Comments