இன்றைய வசனம் :-மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள். ரோமர் 8:14

ஜெபம்......PRAYER

ஜெபமே ஜீவன் ஜெபமே ஜெயம்

நானும் உங்களுக்காக விண்ணப்பம் செய்யாதிருப்பேனாகில் கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்கிறவனாயிருப்பேன்; அது எனக்குத் தூரமாயிருப்பதாக; நன்மையும் செவ்வையுமான வழியை நான் உங்களுக்குப் போதிப்பேன். - (1 சாமுவேல் 12:23).

நற்செய்தியாளர் ஒருவர் அமெரிக்காவிலுள்ள மிகப்பெரிய பாவத்தை குறித்து அறிவிக்க போகிறேன் என்று விளம்பரப்படுத்தினார். குறிப்பிட்ட இடத்தில் திரளான மக்கள் கூடி விட்டனர். 'எதை மிகப்பெரிய பாவம் என்று சொல்ல போகிறார்' என்பதை அறிந்து கொள்ள ஆர்வமிக்கவர்களாக இருந்தனர்.

அமெரிக்காவில் நடக்கும் தொடர் கொலைகளை குறித்து பேசுவாரோ என்று சிலர் நினைத்தனர். போதை மருந்துக்கு அடிமையாக்கப்பட்டிருக்கும் இளைஞர் சமுதாயத்தை குறித்து சொல்ல போகிறாரோ என்று சிலர் நினைத்தனர். அமெரிக்காவில்  நிலவி வரும் பலவிதமான ஒழுக்க கேடுகளை குறித்து, பேச போகிறாரோ என்று சிலர் நினைத்தனர். இவ்விதமான எதிர்ப்பார்ப்போடு மக்கள் கூடியிருந்தனர்.

நற்செய்தியாளர் பிரசங்கிக்க ஆரம்பித்தார். ஜெபமின்மையே அமெரிக்காவில் நடக்கும் எல்லா பாவங்களுக்கும் காரணம் என்பதை முக்கியப்படுத்தி பேசினார். மக்கள் ஜெபிக்காதபோது, இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதி  மேற்கொள்ளுவான்.

இந்நிலை தொடரும்போது, சாத்தான் குறிப்பாக இளைஞர்களை துணிகரமான பாவங்களை செய்ய தூண்டுவான். குடும்ப நல் உறவுகளை  உடைத்து சிதறடிப்பான். குடும்ப ஐக்கியம் குலைக்கப்படும், குழப்பங்கள் உருவாகும், பிரச்சனைகள் பெரிதாகும், இதை தொடர்ந்து எல்லாவித பாவங்களும் உட்பிரவேசிக்கும் என்று விளக்கினார்.

ஆம், நாம் ஆலய ஆராதனையில் கிரமமாய் பங்கெடுப்பது குறித்தோ, வைராக்கியமாய் ஊழியம் செய்வதை குறித்தோ சாத்தான் கவலைப்பட மாட்டான். ஆனால் நாம் எந்த அளவு ஜெபத்தில் கவனமாயிருக்கிறோம் என்பதை பார்த்தால் சாத்தான் கலங்கி விடுவான்.

சாத்தானுடைய அம்;புகள் ஜெபத்தை தான் குறி வைக்கின்றன. நாம் ஜெபிக்காமல், ஊழியம் செய்யலாம், ஜெப ஜீவியம் இல்லாதவர்கள் தேவனை ஆரவாரமாய் ஆராதிக்கலாம். தேவனோடு ஜெபத்தின மூலம் நெருங்கிய உறவு வைத்திராமல் நாம் செய்யும் அனைத்தும் எந்த வித மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்பதை நன்கு அறிந்த பிசாசானவன் எல்லாவற்றிற்கும் அடிப்படை காரணமாக ஜெபத்தையே குறி வைக்கிறான்.

ஜெபத்தை தடுப்பதற்கே எல்லாவிதத்திலும் முயற்சி செய்வான். அந்த ஜெபத்தை தடுத்து விட்டால், எல்லாவித பாவத்தையும் உட்புகுத்தி விடலாம், மனசாட்சியை மழுங்க செய்து இதயத்தை உணர்வற்றதாக்கி விடுவதுதான் அவனது நோக்கம்.'ஜெபமே முக்கியம்' 'ஜெபமே ஜெயம்' ஜெபமே பாவத்திலிருந்து நம்மை தப்புவிக்கும்' என்றெல்லாம் சொல்கிறோம், பாடுகிறோம் இன்றிலிருந்து நாம்; ஜெபிக்க ஒரு தீர்மானம் எடுப்போமா! நாம் ஜெபிக்கும்போது, கிறிஸ்தவ ஒழுங்கிற்காகவோ, கடமைக்காகவோ செய்யலாம், அல்லது தகப்பன் பிள்ளை உறவோடு ஆண்டவரோடு பேசலாம், அதாவது நம்முடைய இருதயம் எப்படி இருக்கிறதோ அதனை அப்படியே அவரிடம் கொட்டி விடுவதாகும்.

ஜெபம் வெறும் வார்த்தைகளாய் இராமல் இருதயத்தின் ஏக்கமாய் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஜெபம் உயிருள்ளதாகவும், சிறுபாவம் இருதயத்தில் நுழைந்தாலும் அதை உணர்த்துவதாகவும், தேவனோடுள்ள உறவை கட்டி எழுப்புவதாகவும் இருக்கும்.

பிரியமானவர்களே, குடும்ப ஜெபத்திலும் குழு ஜெபத்திலும் திருப்தி அடைந்து நின்று விடாதீர்கள்.  ஒரு அதிகாரியிடம் குழுவாக சென்று ஒரு விண்ணப்த்தை சொல்வதற்கும், தனியாக சென்று உள்ளத்தில் உள்ளதை உணர்வு பூர்வமாக சொல்வதற்கும் வித்தியாசம் உண்டல்லவா? அதுபோல தனி ஜெபமே ஒருவiனை தேவ உறவில் வளரசெய்து பாவத்தை சுட்டிகாட்டி கண்ணிகளில் விழாமல் சோதனைக்கு தப்பிக்க வழிவகுக்கும். ஜெபமே நமது உயிர் மூச்சாக இருக்கட்டும், ஜெபமே நம் ஜீவனாக மாறட்டும். ஆமென் அல்லேலூயா.

Post a Comment

0 Comments