சார்லஸ் ஹட்டன் ஸ்பர்ஜன் (1834 - 1892)
"அருமை இரட்சகர் இயேசுவை அவரது பணப்பைக்காக பின்பற்றிச் செல்லும் தேவ ஊழியன் முதல் தரமான யூதாஸ் காரியோத் ஆவான்"
"தேவனைத் தன் பிராண சிநேகிதனாகக் கொண்டிருக்கும் மனிதன் இந்த உலகத்தில் இழந்து போவதற்கு ஒன்றுமே இல்லை"
"இந்த உலகத்தில் பரலோகத்திற்காகத் தங்களை நன்கு ஆயத்தப்படுத்திக் கொண்ட மக்களுக்காக தேவனால் நன்கு ஆயத்தம் செய்யப்பட்டுள்ள இடம் பரலோகமாகும்"
"நீ மோட்சம் சென்று அங்கு வாழும் முன்னர், மோட்சம் உன் இருதயத்தில் ஆரம்பித்து அதின் பாக்கியங்களை உன்னளவில் பூலோகத்திலேயே அனுபவித்துக் கொண்டிருக்க வேண்டும்"
"உன்னைச் சந்திக்கக் கூடிய எதிர்பாராத திடீர் மரணத்திற்காக உன்னை நீ நன்கு ஆயத்தப்படுத்திக் கொள். மரணம் உன்னை சடுதியாக திடீர் என்று சந்திக்காதபோதினும் அது சீக்கிரமாக உன்னை வந்து சந்தித்துவிட்டு சீக்கிரமாகவே போய்விடும்"
"பேசுவதற்கு ஒன்றுமே இல்லாவிட்டால், ஒன்றுமே பேசாமல் அப்படியே அமைதியாக இருந்துவிடு"
"நரகம் என்பது நரகத்தைப் பற்றிய நிச்சயமான உண்மையை மிகவும் காலம் தாழ்த்திக் கண்டு பிடிப்பதாகும்"
"நீ இந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும்போதே உனது சொந்த சாவுப் பிரசங்கத்தை நீயே பிரசங்கித்துவிடு"
"நீ ஜெபிக்கவில்லை என்றால் நீ கிறிஸ்தவனே இல்லை. ஜெபிக்காத ஆத்துமா கிறிஸ்து இல்லாத ஆத்துமாவாகும். உடன்படிக்கையின் தூதனானவருடன் போராடி வெற்றி வீரனாக நீ வெளிவராதபட்சத்தில் தேவ ஜனத்தோடு உனக்கு எந்த ஒரு சுதந்திரவீதமும் கிடையாது. ஜெபம், ஒரு மெய்யான தேவ பிள்ளையின் அழிக்க இயலாத பளிச்சிடும் நெற்றிப் பொட்டு அடையாளமாகும்"
"நாம் எல்லாரும் பெருமை உள்ளவர்களாக இருக்கின்றோம். பெருமையானது, பிச்சைக்காரனின் கந்தை துணிகளுக்குள்ளும், அதே சமயம் பட்டணத்து நகராண்மைத் தலைவரின் அங்கிகளுக்குள்ளும் தன்னை மறைத்துக் கொள்ளக்கூடிய மிகுந்த சாமர்த்தியமுள்ளது. பெருமை என்ற அந்த நச்சுக் களையானது, நாற்றமான சாணிக் குழியிலும், அதே சமயம் மன்னரின் பூங்காவனத்திலும் செழித்தோங்கி வளரக்கூடியது. ஆனால் எந்த ஒரு நிலையிலும் ஒரு கிறிஸ்தவனின் இருதயத்தில் அதை வளர அனுமதித்துவிடக் கூடவே கூடாது"
"நான் மோட்சத்தைக் குறித்து மிகவும் நிச்சயமுடையவனாக இருக்கின்றேன். அதைக் குறித்து நான் பெருமைப்படுகின்றேன்" என்று ஒருவன் தன்னை மிகைப்படுத்திச் சொல்லுவானானால் "அவன் எரி நரகத்திற்கு மிகவும் பாதுகாப்பாக நியமிக்கப்பட்டவன்" என்ற எனது வார்த்தையை ஏற்றுக் கொள்ளுவானாக. உனது பக்தி உன்னை அப்படி பேசச் செய்யுமானால் அந்த பக்தியை உன்னை விட்டு தூக்கி எறிந்து போடு. அது பேசத்தகுதியான ஒரு வார்த்தையல்ல"
"கிறிஸ்தவனே, கிறிஸ்துவானவர் உன்னைத் தமக்கென்று உருவாக்கினார். உண்மைதான், அவர் உன்னை இரண்டு தடவைகள் தமக்கென்று உருவாக்கினார்.. எனவே, உனது ஆவி, ஆத்துமா, சரீரத்தை அவரது ஆளுகைக்கு ஒப்புவி. உனது காலம், உனது பெலன், உனது உடமைகள் யாவையும் அந்த இரட்சகரின் மகிமைக்காக, ஆம், அவருக்காகவே செலவிடு. நீ அப்படிச் செய்வாயானால் உன்னைச் சிருஷ்டித்த கர்த்தாவின் மாபெரும் தேவ நோக்கத்தை நீ நிறைவு செய்கின்றாய் என்பதை உன் மனதில் வைத்துக் கொள்"
"நீ கிறிஸ்தவனானால், உன்னை ஒரு கிறிஸ்தவனாக உலகத்துக்குக் காண்பி. நீ கிறிஸ்து இரட்சகரைப் பின்பற்றுவாயானால் பாளையத்துக்குப் புறம்பாகச் சென்று கிறிஸ்துவுக்குள்ளான உனது அச்ச அடையாளத்தை உலகுக்கு வெளிப்படுத்து. உனக்கும், உன்னைச் சுற்றியுள்ள மக்களுக்கும் எந்த ஒரு வித்தியாசமும், வேறுபாடும் காணப்படாதபட்சத்தில் ராஜா கலியாண வீட்டிற்கு வரும் நாளில் மற்றவர்களிடமிருந்து உன்னை வேறுபடுத்திக் காண்பிக்கும் உனது கலியாண வஸ்திரம் உனக்கு இல்லாததைக் குறித்து நீ அவருக்கு என்ன பதில் கூறப்போகின்றாய்?"
"ஆண்டவரை தனது சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்ட ஒரு பெண்ணிடம் "மனந்திரும்புவதற்கு முன்பும், மனந்திரும்பிய பின்னரும் அவள் ஏறெடுத்த ஜெபத்தின் வித்தியாசம் என்ன?" என்று கேட்டபோது அவள் இவ்வாறு பதிலளித்தாள் "மனந்திரும்புவதற்கு முன்னால் எனது அம்மா எனக்கு எப்படி ஜெபிக்க வேண்டுமென்று கற்பித்தார்களோ அப்படியே நான் ஜெபித்தேன். ஆனால், நான் மறுபடியும் பிறந்து ஆண்டவருடைய பிள்ளையான பின்னர் அவர் என் உள்ளத்தில் ஏவுகின்ற விதத்தில் அவர் எனக்குப் போதிக்கும் வண்ணமாக ஜெபிக்கின்றேன்" என்று பதில் அளித்தாள். ஆ, எத்தனை ஆசீர்வதிக்கப்பட்ட மகத்தான மாறுதல் பாருங்கள்!"
"கிறிஸ்தவன் என்றால் தனது வீட்டுக்குள் கதவைப் பூட்டி அமர்ந்து ஒரு சந்நியாசி ஆகி அதின் மூலம் பரிசுத்தத்தை உருவாக்குவது என்று அவன் நினைப்பானானால் அது பரிசுத்தமாகாது. அது பரிசுத்த குலைச்சலானது. கிறிஸ்தவ பரிசுத்தம் என்பது வெளியே சமுதாயத்துக்கு வரக்கூடியது. அது உலகத்துக்கு ஒளியானது. அது பூமிக்கு உப்பானது. நாம் உலகத்தாராக இல்லாவிட்டாலும் உலகத்தில்தான் இருக்க வேண்டும். நமது ஆசாரியத்துவம் தெருக்களிலும், வீதிகளிலும், குடும்பத்திலும், குழுவாகக் கூடி அமரும் கணப்பு அடுப்பண்டையிலும் நிரூபித்துக் காட்டப்பட வேண்டிய தொன்றாகும். இரவும், பகலும் ஜெபங்களிலும், துதி ஸ்தோத்திரங்களிலும், நன்றி பலிகளை ஏறெடுப்பதன் மூலமாக அவன் ஒரு பூரணமான ஆசாரியனாகின்றான்"
இப்படி கணக்கற்ற பரிசுத்த மணிமொழிகளை உதிர்த்தவர்தான் மாபெரும் பரிசுத்தவானும், பிரசங்க மன்னாதி மன்னரான சார்லஸ் ஹட்டன் ஸ்பர்ஜன் ஆவார்.
19 ஆம் நூற்றாண்டில் டி.எல்.மூடி எவ்வண்ணமாக அமெரிக்காவில் தனது அன்பின் ஆண்டவர் இயேசுவுக்காக எரிந்து ஜொலித்து பிரகாசித்தாரோ அவ்வாறே சார்லஸ் ஹட்டன் ஸ்பர்ஜன், இங்கிலாந்து தேசத்தில் தன் நேச இரட்சகர் இயேசுவுக்காக ஒளி வீசிப் பிரகாசித்தார். ஸ்பர்ஜன் எந்த ஒரு வேதாகம கல்லூரிக்கும் சென்று வேதசாஸ்திரம் படித்தவரல்ல. எனினும் தனது 21 ஆம் வயதில் லண்டன் மாநகரத்தில் மிகவும் பிரசித்திபெற்ற பிரசங்கியானார். லண்டனிலுள்ள எக்ஸ்டர் ஹாலிலும், சர்ரே மியூசிக் ஹாலிலும் 10000 க்கும் அதிகமான மக்கள் கூட்டங்களில் அவர் பேசியிருக்கின்றார். அதின் பின்னர் மெட்ரோ போலிட்டன் தேவாலயத்தை அவர் தோற்றுவித்ததின் பின்னர் ஒவ்வொரு ஓய்வு நாளிலும் பல்லாயிரம் மக்களுக்கு தேவனுடைய வார்த்தைகளைப் பிரசங்கிக்கும் பிரசங்கியாக 40 நீண்ட ஆண்டுகள் தேவனுக்கு ஊழியம் செய்தார்.
தனது பொறுப்பான குருவானவர் ஊழியத்தின் மத்தியில் அவர் ஓய்வு நாள் பள்ளிகளையும், தேவாலயங்களையும் தோற்றுவித்து நடத்தினார். அநாதை குழந்தைகளுக்காக ஒரு அநாதை இல்லத்தையும், தேவ ஊழியர்கள் இறையியல் கற்பதற்காக ஒரு வேதாகம கல்லூரியையும் அவர் ஸ்தாபித்து நடத்தி வந்தார். "பட்டயமும், மண்வெட்டியும்" (Sword and the Trowel) என்ற பிரபல்யமான ஆவிக்குரிய மாதந்திர கிறிஸ்தவ பத்திரிக்கையை தனது மரணபரியந்தம், அதாவது 25 ஆண்டு காலமாக அவர் அச்சிட்டு வெளியிட்டார். அவர் எழுதிய கிறிஸ்தவ புத்தகங்கள் ஏராளம் ஏராளம். நல்ல தரமான கிறிஸ்தவ துண்டுப் பிரதிகளையும் இலட்சாதி இலட்சம் கிறிஸ்தவ பிரசுரங்களையும் அவர் பிரசுரித்து உலகமெங்கும் விநியோகித்தார். அவர் பிரசிங்கித்த ஜீவனுள்ள பிரசங்கங்கள் புத்தகங்களாக அச்சடிக்கப்பட்டு கிறிஸ்தவ உலகமெங்கும் இன்றும் விநியோகிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. உலகத்தின் பல்வேறு மொழிகளிலும் அவைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
ஸ்பர்ஜன் தனது 16 ஆம் வயதில் தன்னைத் தமது பரிசுத்த நாம மகிமைக்காக தெரிந்து கொண்ட தன் அன்பின் ஆண்டவர் இயேசுவுக்காக மிகுந்த உண்மையோடும், உத்தமத்தோடும் இராப்பகலாக அயராது பாடுபட்டு உழைத்து அநேக ஆயிரம் மக்களை ஆண்டவரண்டை வழிநடத்தினார். அந்த மாபெரும் தேவ மனிதரின் வாழ்க்கைச் சரித்திரத்தின் இரத்தினச் சுருக்கத்தை கீழே உங்களுக்கு ஜெபத்தோடு மொழிபெயர்த்து தருகின்றேன். ஜெபநிலையில் நீங்களும் அதை வாசித்து உங்கள் ஆவிக்குரிய வாழ்க்கைக்கு அனுகூலமாக்கிக் கொள்ளுங்கள். அந்தப் பரிசுத்தவானைப்போல நீங்களும் கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமைக்காக தேவ பெலத்தால் எழும்பிப் பிரகாசியுங்கள்.
0 Comments