இடைவிடாமல் ஜெபியுங்கள்
அநேகர் ஏழைகளாக, கஷ்டத்தில் இருக்கும்போது அதிகமான நேரத்தை ஜெபத்தில் கழிப்பார்கள். தேவன் அவர்களை ஆசீர்வதித்து, அவர்கள் வாழ்க்கையில் வெற்றியடையும் போது மிகவும் சுறுசுறுப்பாகி விடுவதால் தேவனை நினைக்கவோ, அதிகமான நேரத்தை அவர் சமூகத்தில் கழிக்கவோ மறந்துவிடுகிறார்கள். இது மிகவும் தவறு, தேவனுடைய உதவியால் ஆசீர்வாதங்களை அடைந்து, வாழ்க்கையில் வெற்றி பெறும் நாம், வெற்றிப்பாதையில் தொடர்ந்து செல்லவும், தேவ ஆசீர்வாதம் எப்போதும் நம்மோடிருக்கவும் அதிக நேரத்தை ஜெபத்தில் கழிப்பது அவசியம். அரட்டை அடிப்பதற்கும், தொலைகாட்சிப் பார்ப்பதற்கும் அதிக நேரத்தை செலவிடும் நாம், ஜெபிப்பதற்கு நேரமில்லை என்று கூறுவது தவறாகும்.
ஜார்ஜ் வாஷிங்கடன் அமெரிக்க துருப்புகளுக்குத் தளபதியாகச் சென்றபோது, அதிக நேரத்தை ஜெபத்தில் கழிப்பதுண்டு. தன் மேற்பார்வையின் கீழ் பணிபுரியும் சேனை வீரர்களின் சுகத்துக்காகவும், அவர்களுடைய குடும்பங்களுக்காகவும் அதிக நேரம் கண்ணீரோடு தனியாக முழங்காலில் நின்று ஜெபிப்பார். பின்னர் அவர் அமெரிக்க நாட்டின் ஜனாதிபதி ஆனபின்பும் இந்த பழக்கம் மாறவில்லை. எவ்வளவு வேலைகள் இருந்தாலும் சரியாக இரவு ஒன்பது மணிக்கு ஒரு சிறு விளக்கையும் எடுத்துக் கொண்டு ஒரு தனி அறைக்குச் சென்று தாழிட்டுக் கொள்வார். ஜனாதிபதி மாளிகையில் வேலை பார்த்த அநேகர் இவர் சரியாக ஒன்பதிலிருந்து பத்து வரை என்ன செய்கிறார் என்று அறிந்து கொள்ள ஆசைப்பட்டனர். ஒரு நாள் ஒரு மனிதன் அவர் அறைக்குள் செல்வதைப் பார்த்து ஆவல் தாங்க முடியாமல் இரகசியமாக உள்ளே எட்டிப் பார்த்தான். அங்கே ஜார்ஜ் வாஷிங்டன் தன் வேத புத்தகத்தை திறந்து வைத்துக் கொண்டு அதன் முன்பாக முழங்கால் படியிட்டு உருக்கமாக ஜெபித்துக் கொண்டிருந்தார். நீங்கள் நல்ல வேலையிலிருக்கலாம், அரசாங்க அதிகாரியாக இருக்கலாம், வியாபாரியாக, தொழில் அதிபராக இருக்கலாம், ஆயினும் ஜெபிப்பதை மறந்து விடாதிருங்கள்.
0 Comments