இன்றைய வசனம் :-மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள். ரோமர் 8:14

மகிமை அடைந்தவர்களின் பேரானந்தம் பகுதி 3 (The Rapture Of The Glorified Part 3)

 

Part 3

ஆகிலும், முந்தினோர் அநேகர் பிந்தினோராயும், பிந்தினோர் அநேகர் முந்தினோராயும் இருப்பார்கள்" மத் 19:30.


‘இவ்விதமாக, பிந்தினோர் முந்தினோராயும், முந்தினோர்

பிந்தினோராயும் இருப்பார்கள்" மத் 20:16,


தேவனுக்கு பணிவிடை செய்ய வருபவர்களைக் குறித்த உபதேசத்தில் ஆண்டவராகிய இயேசுக்கிறிஸ்து மேற்கூறிய இரு வசனங்களையும் குறிப்பிடுகிறார். நாம் கர்த்தருக்கு சேவை செய்ய வேண்டுமானால் நாம் இரட்சிக்கப்பட்டிருக்க வேண்டும். இரட்சிப்படையாத நிலையில் கடவுளுக்கு சேவை புரிய முடியாது. "மாம்சத்துக்குட்பட்டவர்கள் தேவனுக்குப் பிரியமாயிருக்க மாட்டார்கள்." மாம்ச சிந்தனை தேவனுக்கு விரோதமான பகை. தேவனுக்குப் பகைஞராக இருந்து கொண்டு அவருக்கு ஊழியம் செய்வதால் பிரயோஜனமில்லை. அவரது விரோதிகள் அவருக்கு பணிபுரிவதில் அவருக்கு விருப்பமில்லை. அடிமைகள் அவரது சிங்காசனத்தை அலங்கரிப்பதில் அவருக்குப் பிரியமில்லை. நாம் முதலாவதாக இரட்சிப்பைப் பெற வேண்டும். இரட்சிப்பு கிருபையாகக் கிடைக்கிறது. "கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள். அப்படியாக இரட்சிக்கப்பட்ட பிற்பாடு. இந்த இரட்சிப்பின் பலனாக. நாம் அவருக்கு ஊழியம் செய்கிறோம். முதலாவது இரட்சிப்பு! பிறகு ஊழியம்!| இரட்சிக்கப்படுகிறவர்கள் தேவனுடைய பிள்ளைகளாகிறார்கள். அதன் பிற்பாடு ஒரு பிள்ளையைப் போல தனது தகப்பனின் வீட்டில் வேலை செய்கிறார்கள். அந்த ஊழியமும்கூட கிருபையினால் வருவதே. ஒருவன் செய்கிற இந்த ஊழியம் உடன்படிக்கையின் பிரகாரமானதல்ல. இதை செய். அப்போது பிழைப்பாய்" என்கிறபடியான பழைய உடன்படிக்கையின் ஊழியமல்ல. கிருபையின் கீழாக அவன் இருக்கிறான். ஆகவே, பாவம் அவன் மீது அதிகாரம் செலுத்துவதில்லை. கிருபையே அவன் மீது அதிகாரம் செலுத்துகிறது. ஆகவே அவன் தன் வாழ்நாள் முழுவதுமாக கர்த்தருக்குப் பணி செய்து அவரைப் பிரியப்படுத்த விரும்புகிறான். நாம் அவருக்கு பணி செய்வதற்காகவே இரட்சிப்பை அடைந்திருக்கிறோம் என்பதை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. தேவனுக்கு ஊழியராய் இருப்பதற்காகவே நாம் பாவத்திலிருந்து விடுதலையாக்கப்பட்டிருக்கிறோம். "கர்த்தாவே. நான் உமது அடியேன். நான் உமது அடியாளின் புத்திரனும், உமது ஊழியக்காரனுமாய் இருக்கிறேன். என் கட்டுகளை அவிழ்த்து விட்டீர்” என்று தாவீது கூறுகிறார். நமது கட்டுகள் அவிழ்க்கப்பட்டபடியால், நாம் வேறுவிதமான கட்டுகளுக்குள்ளாக இருக்கிறோம். அவை அன்பின் கட்டுகள். உன்னதமானவருக்கு சேவை செய்யும்படியாக அன்பின் கட்டுகளால் கட்டப்பட்டிருக்கிறோம்.


அந்தவிதமாக அவருக்கு ஊழியம் செய்ய வரும்போது. நாம் இரட்சிக்கப்பட்ட ஆண்களும் பெண்களுமாய் இருக்கிறோம் என்பதை மறக்கக் கூடாது. நம்முடைய திறமையினால் நம்மால் ஆத்தும ஆதாயம் செய்ய முடியும் என நாம் கற்பனை செய்து கொண்டிருந்தோமானால், உரிமையைக் கோருகிறவர்களாக காணப்படுவோம். கடவுளிடம் உரிமை கேட்டு சட்டம் பேசுகிறவர்கள். அவருக்கு முன்பாக தங்களுடைய உண்மை நிலையை இழந்து போய் விடுவார்கள். "நீங்கள் நியாயப்பிரமாணத்துக்கு உட்பட்டவர்கள் அல்ல, கிருபைக்குக் கீழானவர்கள் என்பதை நினைத்துக் கொள்ளுங்கள். உங்களை மீட்டுக் கொண்டதற்காக மாத்திரமல்ல, உங்களுடைய தற்போதைய நிலமைக்கும், உங்களுக்கு சொந்தமானவைகளுக்காகவும். நீங்கள் செய்கின்ற யாவற்றிற்காகவும் நீங்கள் எவ்வளவாக கர்த்தருக்குக் கடமைப்பட்டவர்கள் என்பதை மறக்கத் தொடங்கிவிட்டீர்களானால். நீங்களும் புத்தியில்லாத கலாத்தியரைப் போலத்தான் காணப்படுவீர்கள். ஆவியினாலே ஆரம்பம் பண்ணின அவர்கள் மாம்சத்தினாலே முடிவு பெறும்படியாக நாடினதைப் போல ஆவீர்கள். "என்னிடத்தில் இன்னும் என்ன குறைவுண்டு?" என்று கேட்ட வாலிபனைப் போல இருப்பீர்கள். "நாங்கள் எல்லாவற்றையும் விட்டு உம்மைப் பின்பற்றினோமே. எங்களுக்கு என்ன கிடைக்கும்?" என்று உரிமை கோரிய பேதுருவைப் போலிருப்பீர்கள். காலையிலிருந்து மாலை வரைக்கும் திராட்சைத் தோட்டத்தில் வேலை செய்து விட்டு, ஒரு மணி நேரம் மாத்திரம் வேலை செய்தவர்கள் பெற்றதாகிய ஒரு பணத்தையே தாங்களும் பெற்றதற்காக முறுமுறுத்த வேலையாட்களைப் போல காணப்படுவீர்கள். தனது ஊழியர்கள் இவ்விதமான ஆவிக்கு அடிமைப்பட்டவர்களாக இருப்பதை கிறிஸ்து ஏற்றுக் கொள்வதில்லை. அவ்விதமான மனப்பான்மையை அவர் எங்கெல்லாம் காண்கிறாரோ உடனடியாக அதை கண்டிக்கிறார். ஊழியமும் அதற்கு வருகின்ற வெகுமதியும் ஆகிய எல்லாமே கிருபையினால் கிடைக்கிறது. கடவுள்தாமே ஊழியத்தை நமக்குக் கொடுக்கிறார். தாம் அளித்த வேலைக்குரிய வெகுமதியையும் அவரே தருகிறார். இதை கிருபையின் மிக உன்னதமான நிலை என்றுதான் நாம் கூறவேண்டும். கடவுள் நமக்கு சிறந்த ஊழியத்தைத் தருகிறார். அவரே கொடுத்த அந்த வேலைக்காக அதற்கு வெகுமதியையும் பிற்பாடு அவரே தருகிறார். ஆகவே முதலில் இருந்து கடைசி வரைக்கும் எல்லாமே கிருபையினால் கிடைப்பதுதான். ஊழியத்தையோ அதற்குக் கிடைக்கும் வெகுமதியையோ நியாயப்படுத்திக் கொள்ளும் நோக்கில் பார்க்கக் கூடாது. இதை மனதில் கொண்டவர்களாக நாம் இந்த தியானத்தைத் தொடருவோம். 


மேற்கூறிய வசனத்தின் பேரில் நீங்கள் பிரசங்கங்களைக்

கேட்டிருப்பீர்கள். ஆனால் அதோடு தொடர்புடையவைகளை ஒருவேளை கேட்டிருக்க மாட்டீர்கள். இந்த வசனம் என்னுடைய இருதயத்திற்கு எதைப் பிரசங்கித்ததோ அதை நான் உங்களுக்கும் பகிர்ந்தளிக்க விரும்புகிறேன். இந்த வசனத்திற்கு முன்னால் வரும் வசனங்களையும் அதற்குப் பின்னால் வரும் வசனங்களையும் சேர்த்துப் பார்த்து அதன் மூலமாக பரிசுத்த ஆவியானவர் நமக்கு என்ன கற்றுத் தருகிறாரோ அதைக் கற்றுக் கொள்ளலாம்.


அ) கர்த்தருக்கு செய்யும் ஊழியம் கிருபையாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது


மேலோட்டமாக பார்த்தால் இவ்வசனத்தில் இந்த கருத்து தென்படவில்லை. ஆனால் மற்ற வசனங்களோடு தொடர்புபடுத்தி பார்க்கையில் அது விளங்குகிறது. நமது கர்த்தருக்கு செய்யும் ஊழியத்தில் இலவச கிருபை வெளிப்படுகிறது. இக்கருத்தை சிந்தித்துப் பாருங்கள். கர்த்தருக்கு ஊழியம் செய்வது கிருபையாகத்தான் அருளப்பட்டிருக்கிறதென்பதை சிந்தியுங்கள்.


ஏனென்றால், அவருக்கு ஊழியம் செய்வது நம் மேல் விழுந்த கடமையாயிருக்கிறது. வெகுமதி கொடுக்கப்பட்டாலுங்கூட, அது நமது கடமை.நியாயப்பிரமாணத்தின்படி நாம் கர்த்தரில்முழு இருதயத்தினாலும், முழு ஆத்துமாவினாலும், முழுமனதினாலும், முழுபெலத்தினாலும் அன்பு செலுத்த கடமைப்பட்டிருக்கிறோம். அதற்கு மேற்பட்டது எதுவுமில்லை. நாம் அவருக்காக எதையாவது செய்வதற்கு முடியுமானால் அதை செய்வதற்கு நாம் ஏற்கனவே கடமைப்பட்டவர்களாகத்தான் இருக்கிறோம். அவசியமானவைகளுக்கு மேலாக எந்த கிரியையும் செய்வதற்கு நியாயப்பிரமாணத்தில் இடமில்லை. ஏனென்றால் அது எல்லா பரிசுத்தத்தையும் உள்ளடக்கியுள்ளது. அது சகல பாவங்களையும் கண்டிக்கிறது. சகலத்தையும் செய்து முடித்தவர்களாயிருந்தாலும் நாம் அப்பிரயோஜனமான வேலையாட்கள்தான். கடமையை மாத்திரமே நாம் செய்து முடித்தவர்களாயிருப்போம். ஆகவே சகோதரரே. ஏதாவதொரு ஊழியம் செய்யும்படிக்கு நாம் அழைக்கப்பட்டிருப்போமானால், அதற்கு ஒரு வெகுமதியும் உண்டென்று வாக்களிக்கப்பட்டிருக்குமானால் அது நிச்சயமாக கிருபையால் கிடைத்த ஊழியமாகவே இருக்கும். அதைத் தவிர்த்து வேறொன்றும் இல்லை. சுவிசேஷத்திற்குக் கீழாகவும் அப்படித்தான் இருக்கிறது. நாம் செய்யக்கூடியவைகள் யாவுமே. அவருக்கு செய்வதற்கு ஏற்கனவே கடமைப்பட்டவைகளாகத்தான் இருக்கிறது. "நீங்கள் உங்களுடையவர்கள் அல்ல. கிரயத்திற்குக் கொள்ளப்பட்டிருக்கிறீர்களே!" உங்கள் சிந்தனை. செயல். பெலன், திறமை. குணம் போன்ற அனைத்துமே கிறிஸ்துவினால் விலைக்கிரயம் செலுத்தப்பட்டு மீட்கப்பட்டிருக்கிறது. அவர் மீட்டுக் கொள்ளாத எதுவுமே உங்களிடம் கிடையாது. ஆகவே உங்களிடமுள்ள அனைத்தும் கிறிஸ்துவுக்கே சொந்தம். உங்களை நேசித்தபடியால் தமது சொந்த இரத்தத்தை சிந்தி உங்களை மீட்டுக் கொண்ட இயேசுவுக்காக சந்தோஷத்தோடும் மிகுந்த நன்றியோடும் உங்களால் முடிந்த யாவற்றையும் செய்வதற்கு நீங்கள் கடமைப்பட்டிருக்கிறீர்கள். சுவிசேஷகர்களின் ஆர்வம், இரத்தசாட்சிகளின் பொறுமை, மன்னிப்பு கோருபவர்களின் விசுவாசம். தேவபக்தர்களின் பரிசுத்த வாழ்வு ஆகிய அனைத்துமே நியாயமாக கிறிஸ்துவுக்கு சேரவேண்டிய உரிமையாகும். ஆகவே அதற்காக அவர்களுக்கு வெகுமதி தர வேண்டியதில்லை. அவர்களின் நடவடிக்கை, செயல் யாவுமே அவர்கள் கிறிஸ்துவுக்கு செலுத்த வேண்டிய கடமையாகும். நாம் அவருக்காக செய்கிற எதற்காகவது வெகுமதி கொடுக்கப்பட வேண்டுமானால், அந்த செயலை செய்யும்படி அவர் அனுமதித்திருப்பதே நமக்குக் கிருபையாக கிடைத்திருக்கிற வெகுமதியாகும். அதின் மூலமாக நாம் கிருபையை பெறுகின்றோம்.


நமது ஊழியம் எதுவுமே ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல. நாம் செய்கிற எந்த காரியமும் பலவீனமாகவும். குறைவுள்ளதாகவும். களங்கப்பட்டதாகவும்தான் இருக்கிறது. ஆகவே எதற்காகவும் நாம் அவரிடம் வெகுமதியை எதிர்பார்க்க வழியில்லை. யோபு. தாழ்த்தப்பட்ட தறுவாயில் இதை உணர்ந்து கொண்டார். "நான் என்னை நீதிமானாக்கினாலும் என் வாயே என்னைக் குற்றவாளியாக்கும். நான் உத்தமன் என்று சொன்னாலும், நான் மாறுபாடானவன் என்று அது சாட்சி கொடுக்கும். நான் உத்தமனென்றாலும் என் உள்ளத்தை நான் அறியேன். என் ஜீவனை அரோசிப்பேன்" என்று சொல்லுகிறார். நமது திறமையைக் கொண்டு நாம் அவர் முன்பாக நின்றோமானாலும், அவருக்கு முன்பாக நாம் தேவமகிமையை இழந்தவர்களாகத்தான் காணப்படுகிறோமென்று நமக்கே தெரியும். பல விஷயங்களில் நாம் குற்றவாளிகளாகக் காணப்படுவதால், நமது நீதிஅனைத்தும் அழுக்கானகந்தைகளாக, எறிந்து விடப்பட வேண்டிய நிலையில்தான் இருக்கிறது. நமது மிகச் சிறப்பான செயல்கள் கூட அவர் பார்வையில் அழுக்கான கந்தைகள்தான். "எனக்கு லாபமாயிருந்தவைகள் எவைகளோ அவைகளைக் கிறிஸ்துவுக்காக நஷ்டமென்று எண்ணினேன். . . நான் கிறிஸ்துவை ஆதாயப்படுத்திக் கொள்ளும்படிக்கும். நியாயப்பிரமாணத்தினால் வருகிற சுயநீதியை உடையவனாயிராமல், கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினால் வருகிறதும், விசுவாசம் மூலமாய் தேவனால் உண்டாயிருக்கிறதுமான நீதியை உடையவனாயிருந்து, கிறிஸ்துவுக்குள் இருக்கிறவனென்று காணப்படும்படிக்கும் எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன்" என்று பவுல் சொல்லுகிறார். நமது தோல்விகளையும், மீறுதல்களையும், கீழ்ப்படியாமையையும் குறித்து நமக்கு குற்றஉணர்வு இருக்கிறது. அவைகளுக்காக தேவனிடம் மன்னிப்பை வேண்டி, இரக்கத்திற்காக கெஞ்சி நிற்கிறோம். நம்மிடம் இருப்பதாக நினைக்கின்ற மிகச் சிறந்த குணத்திலுங்கூட பாவம் தென்படுவதை உணர்ந்து அதை அவரிடம் அறிக்கையிட்டுக் கொண்டிருக்கிறோம். இப்படியிருக்கையில் அவருக்கு செய்கின்ற ஊழியமும் கிருபையினால் வருவதாயிருக்க, நமக்கு வெகுமதி கிடைத்ததானால் அது கிருபையால் கிடைப்பதைத் தவிர்த்து வேறு எப்படி இருக்க முடியும்?


கடவுளுக்கு சேவை செய்ய முடிவதுகூட கடவுளின் கிருபையினால் பெறும் வெகுமதியே. இதை மீண்டுமாக சிந்தித்துப் பாருங்கள். அறிவை உபயோகித்து செய்கின்ற சேவையை மாத்திரம் நான் இவ்விடத்தில் குறிப்பிடவில்லை. கடவுளின் சேவைக்காக தாராளமாக பொருளுதவியை அளிக்கக் கூடிய திறனுடையவர்களையும் சேர்த்துதான் கூறுகிறேன். சிந்திக்கும் ஆற்றலையும், பிரசங்கிக்கும் வல்லமையையும் கடவுள் தருவது போல பணம் சம்பாதிக்கக் கூடிய திறமையையும் கடவுளே கொடுக்கிறார். அப்படியிருக்க "உங்களுக்கு உள்ளவைகளில் நீங்கள் பெற்றுக் கொள்ளாதது என்ன?” இங்கிருப்பவர்களில் யாராவது தங்களது தாலந்துகளைக் கொண்டு கடவுளுக்கு சேவை செய்தார்களென்றால், அதுவும் தங்களுக்கு அருளப்பட்டதால்தான் அதை சொந்தமாகக் கொண்டிருக்கிறார்கள் என நான் கருதுவேன். யாரும் அவர்கள் தாலந்துகளை சம்பாதித்துக் கொள்ள முடியாது. அல்லதுயாராவது தாங்கள் சம்பாதித்த பொருட்களினால் கடவுளுக்கு ஊழியம் செய்தீர்களென்றால். அந்த பொருளை சம்பாதிக்கக் கூடிய திறனைத் தந்ததும் கடவுள்தான். அவரிடமிருந்தே எல்லா நல்ல ஈவுகளும். பரிபூரணமான எந்த நன்மையும் வருகிறது. ஆகவே கடவுளுக்கு ஊழியம் செய்யக்கூடிய திறன், கிருபையாகக் கிடைக்கும் வெகுமதியாகும்.


பிரியமானவர்களே, எந்த விசேஷித்த விதத்திலாவது, கடவுளுக்கு சேவை செய்யும்படி அழைப்பு பெற்றீர்களானால் அதுவும் கிருபையினால் வருவதே. ஊழியத்திற்கு நாம் அழைப்புப் பெறுவோமானால், பவுலின் முன்மாதிரியை கவனிப்போமாக: "பரிசுத்தவான்களெல்லாரிலும் சிறியவனாகிய நான்.. கிறிஸ்துவினுடைய அளவற்ற ஐசுவரியத்தைப் புறஜாதிகளிடத்தில் சுவிசேஷமாய் அறிவிக்கிறதற்காக இந்தக் கிருபை எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது” என்கிறார். நமது இராஜாங்க நாணயத்திலே, “கடவுளின் கிருபையினாலே" என்று ஆட்சியாளர்கள் அச்சடித்துக் கொள்கிறார்கள். இருக்கட்டும். நல்லதுதான். ஆனால் நாம் அதை நமது வாழ்க்கையிலே செயல்படுத்துவோம். "ஞாயிறு பாடசாலை ஆசிரியர் கடவுளின் கிருபையினாலே", "தெருப்பிரசங்கிகள் கடவுளின் கிருபையினாலே". “கல்லூரி மாணாக்கர்கள் - கடவுளின் கிருபையினாலே", "சுவிசேஷ ஊழியர்கள் - கடவுளின் கிருபையினாலே என்பதே நமது எண்ணமாயிருக்கட்டும். தேவன்தாமே நம்மை பலவிதமான நல்ல பணிகளுக்கென அழைக்கிறார். நமக்கு ஒரு பணி நியமிக்கப்படுகிறதென்றால் அதை நியமிப்பவர் ஆத்துமாக்களின் பிரதான மேய்ப்பரே. அவர் யாரை அனுப்ப வேண்டுமென தீர்மானித்திருந்தாரோ அவர்களைத் தம்மிடமாக மலை மீதினில் அழைத்து, அவர்களை முதலாவதாக உலகத்தில் அனுப்பினார். அவர்களை விட்டுச் செல்வதற்கு முன்பாக, அவர்களுக்கு அந்த பிரதான கட்டளையைக் கொடுத்தார். அந்தக் கட்டளையானது அவரைப் பின்பற்றுகிற அனைவருக்கும் இன்றைக்கும் பொருத்தமானது. நீங்கள் உலகமெங்கும் போய் சர்வசிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்." எந்த வகையிலாவது ஊழியம் செய்யும்படி அவர் நம்மை நியமிப்பது அவருடைய கிருபைதான். அவருக்காக எதையாவது செய்யக்கூடுமானால் அது எவ்வளவு பெரிய கிருபைl அவருடைய பாதரட்சையின் வாரை அவிழ்ப்பதற்கு நாம் பாத்திரவான்கள் அல்ல. அவருடைய பாதரட்சைகளை சுமக்கவும் பாத்திரமானவர்கள் அல்ல. ஒரு தாழ்வான வேலையைப் போல இருந்தாலும், கிறிஸ்துவுக்கு செய்கிற எந்த வேலையும் அது ராஜாவுக்கு செய்கிற பணிவிடை. சமையலறையில் பாத்திரங்களைக் கழுவுகிற வேலையாக இருந்தாலும், அவருக்காக பணிவிடை செய்ய நியமிக்கப்பட்டேனென்றால் அவருக்கே ஸ்தோத்திரம். அந்த சமயலறை, அரண்மனையில் அல்லவா இருக்கிறது! கிறிஸ்துவின் அரண்மனைப் பணிப்பெண்கள் மரியாதைக்குரியவர்கள். கடவுளுக்குப் பணிவிடை செய்கிறவன். ஆளுகிறவனாயிருக்கிறான். பூலோகத்திலே அவருக்கு சேவை செய்வது புகழப்படத்தக்கது. பரலோகத்திலே அவருக்கு பணிவிடை செய்வது நமக்குக் கிடைக்கும் நித்தியமான மகிமையில் ஒரு பகுதி. இதெல்லாம் கிருபையினால்தான் கிடைக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

கர்த்தருக்கு சேவை செய்வதற்குக் கிடைக்கிற ஒவ்வொரு சந்தர்ப்பமும் கிருபையே. உடல்நலக் குறைவின் காரணமாக பிரசங்கம் செய்ய முடியாமல் போய். பிற்பாடு சரீரசுகம் கிடைத்தபின் மீண்டுமாக பிரசங்கமேடையில் நிற்பதற்கு வாய்ப்பு கிடைக்கிற தருணங்களில் அதை கடவுளிடமிருந்து கிடைக்கப் பெற்ற பெரும் கிருபையாக நான் நினைப்பேன். ஒருவருக்கு பேனாவைக் கரங்களில் பிடிக்க முடியாதபடி சுகவீனம் ஏற்பட்டு. எழுதமுடியாத நிலையை அனுபவித்தபிறகு, மீண்டுமாக எழுதக்கூடிய நிலை வரும்போது அதை கிருபையாக கிடைத்ததென கருதுகிறோம். சிலரிடம் மிகவும் நெருக்கமாக பேசக்கூடிய சந்தர்ப்பங்களை கடவுள் உங்களுக்கு அளிப்பதும் கிருபை என்றுதான் எண்ணுகிறேன். சிறுபிள்ளைகள் உங்களிடமிருந்து கற்றுக் கொள்ளும்படியாக அவர்களை ஞாயிறுபாடசாலைக்கு அழைத்து வருவதும் கடவுளின் கிருபையே. நாம் விழிப்புள்ளவர்களாக இருந்தால், உபயோகித்துக் கொள்ளக்கூடிய சந்தர்ப்பங்கள் நம்மைச் சுற்றிலும் நாள் முழுவதும் இருப்பதைக் காணலாம். அப்போது, “கர்த்தருக்கு ஸ்தோத்திரம். அவர் தமது அனாதி தீர்மானத்தின்படியாக, அவருக்கு சிறுசிறு சேவைகள் செய்யக்கூடிய நிலையில் என்னை வைத்திருப்பதற்காக ஸ்தோத்திரம். அவருடைய நாமம் புகழப்படும்படியான பலனை அவர் விளைவிப்பதற்காக ஸ்தோத்திரம் என்று துதிக்கக் கூடியவர்களாக இருப்பீர்கள். எல்லாமே கிருபையினால் வருவது. அவருக்கு  சேவை செய்யும்படியான வழிகளைத் தருவது. அவைகளை நாம் பிரயோஜனப்படுத்திக் கொள்ளும்படியான எண்ணத்தையும், பெலனையும் அளிப்பது ஆகிய யாவுமே கடவுளிடமிருந்து வரும் வெகுமதிகள்தான்.



கடவுளுக்கு சேவை செய்வதற்கான சரியான மனப்பாங்கை பெறுவதும் கிருபையினால்தான்


நீங்கள் அவருக்கென ஒரு வேலையை செய்வதற்கான சந்தர்ப்பத்தையும், அழைப்பையும் பெறுவது கிருபையினால்தான். இருந்தாலும் அதை செய்யக்கூடிய சரியான மனநிலையைக் கொண்டிருப்பதும் கிருபையே. நீங்கள் எவ்வளவோ நேரங்களில் சுறுசுறுப்பில்லாமலும் உற்சாகமில்லாமலும் இருந்ததில்லையா? பரிசுத்த ஆவியானவர் உங்களைத் தட்டி எழுப்பாவிட்டால் நீங்கள் அப்படியேதானே இருப்பீர்கள்? பல சமயங்களில் நீங்கள் குளிர்ந்து போய், உறைந்த பனிக்கட்டியைப் போல விறைத்துப் போனவர்களாகக் காணப்படுவதில்லையா? பரிசுத்தஆவியானவர் உங்களை அனல் மூட்டி விடாவிட்டால் உங்கள் உள்ளத்திலிருந்து ஜீவஊற்று புறப்படுமா? சகோதரரே. விடுதலை பெற்ற பெண்மானைப் போல கர்த்தர் உங்களை சுதந்திரமாக செயல்படவைத்த கிருபையுள்ள அநேக சந்தர்ப்பங்களுக்காக நீங்கள் அவருக்கு நன்றி செலுத்துவதில்லையா? கிருபை பொருந்திய நல்வார்த்தைகளை நீங்கள் பேசியது யாரால் வந்தது? அந்த வல்லமை யாருடையது? நீங்களாக பேசும்போது, ஓ. அது எவ்வளவு கீழானதாக இருந்திருக்கிறது ஆனால், கடவுள் உங்கள் மூலமாக பேசும்போது. ஓ. அது எவ்வளவு மேன்மையானதாக இருந்திருக்கிறது! இவை யாவும் கிருபையின் செயல்பாடு என்பது உங்களுக்கு விளங்குகிறதா? மனிதரை கிறிஸ்துவிடம் வரும்படியாக அழைப்பு விடுத்து பேசுகிற பிரசங்கியாரின் ஒவ்வொரு கண்ணீர் துளியும், அந்த ஆத்துமாவின் நிமித்தமாக அவர் படுகிற அங்கலாய்ப்பும் வேதனையும், கிருபையை உணர்ந்திருக்கிற ஊழியர் அனுபவிக்கிற உணர்வுகள் யாவும் கிருபையினால் வருவதே. அதற்காக கடவுளுக்கே மகிமையை செலுத்த வேண்டும். நாம் நியாயப்பிரமாணத்தின் கீழாக வேலை செய்கிறவர்கள் அல்ல. ஏனென்றால் நியாயப்பிரமாணம் பெலனைத் தருவதில்லை. கிருபைதான் நம்மை சேவை செய்ய வைக்கிறது. ஏனென்றால் அதுவே சேவை செய்வதற்கு வேண்டிய பெலனை நமக்குத் தருகிறது. தேவன் ஒருதரம் விளம்பினார். இரண்டுதரம் கேட்டிருக்கிறேன்: வல்லமை தேவனுடையது என்பதே. கிருபையும் உம்முடையது. ஆண்டவரே! தேவரீர் அவனவன் செய்கைக்குத் தக்கதாகப் பலனளிக்கிறீர். நீர் அவனவனுடைய தேவைக்குத் தக்க பெலத்தைத் தருகிறீர், அந்தந்த வேலைக்கேற்ற வழிநடத்துதலையும் அளிக்கிறீர். இதுவும் கிருபைதான். இல்லையா?


பரிசுத்த ஊழியத்தின் வெற்றி முழுவதும் கர்த்தராலேயே வருகிறது. இந்த கருத்தை நீங்கள் மறுப்பு எதுவும் தெரிவிக்காமல் ஒத்துக் கொள்வீர்கள். விதைத்ததும், தண்ணீர் ஊற்றியதும் நாங்கள்தான் எனத் துணிகரமாக நாம் சொன்னாலும்கூட, விளையச் செய்தது நாங்கள்தான் என்று யாரும் துணிந்து கூறமாட்டோம் என நினைக்கிறேன். "நான் விதைத்தேன்" என்று கூறிய பவுல், "அப்பெல்லோ நீர் பாய்ச்சினான். தேவனே விளையச் செய்தார்" என்று குறிப்பிடுகிறார். பரிசுத்தஆவியானவர் ஒரு மனிதனின் இருதயத்தில் கிரியை செய்து. அவனுடைய பாவங்களை அவனுக்கு உணர்த்தி, அவனை மனந்திரும்பச் செய்யாவிட்டால், நமது அறிவுரைகளில் ஒன்றையாவது அவன் ஏற்றுக் கொள்வானா? இயேசுக்கிறிஸ்துவை, அவர் அருளும் வெளிச்சத்தில் காணாத ஒருவனின் மனக்கண்களை நமது பலவீனமான பிரசங்கத்தினால் திறந்துவிட முடியுமா? கடவுளின் ஆவியானவர் நம்மிடம் இல்லாமல், இருதயம் நொறுங்குண்டவர்களுக்கு நம்மால் ஆறுதல் அளித்துவிட முடியுமா? சிறைப்பட்டவர்களுக்கு விடுதலை கூற முடியுமா? கட்டப்பட்டிருப்பவர்களின் கட்டுகளை அவிழ்க்க இயலுமா? நாம் சுவிசேஷத்தை அறிவித்தாலுங்கூட, கடவுளின் கிரியை அதில் இல்லாவிட்டால் அது மண்ணில் விழுவது போல விழுந்து வீணாய்த்தானே போகும்? அவரே நம் மூலமாகவும் நம்மைக் கொண்டும் கிரியை செய்கிறார். நாம் அவரோடு சேர்ந்து வேலை செய்கிற வேலையாட்கள். நமது கரத்தை உயர்த்துகிறோம். அதில் அவர் தமது கரத்தை உயர்த்துகிறார். நாம் பேசுகிறோம். அவர் நம் மூலமாகப் பேசுகிறார். நாம் மனிதருடைய இருதயத்தைத் தொடும் விதத்தில் பேசுகிறோம். ஆனால் அவர்தான் அவர்களைத் தொடுகிறார். அவர்களை அழுகிறவர்களாக கிறிஸ்துவிடம் அழைத்து வருகிறோம், ஆயினும் அவரே அவர்களைக் கிறிஸ்துவிடம் அழுகிறவர்களாக வரப்பண்ணி அவர்களை இரட்சிக்கிறார். அவருடைய நாமத்திற்கே துதி உண்டாவதாக! அவருடைய நாமத்தினால் அநேக ஆண்டுகளாக தீர்க்கதரிசனம் உரைத்து வந்தாலும், உலர்ந்த எலும்புகளுக்கு உயிர் கொடுத்ததாக யாராவது துணிந்து சொல்ல முடியுமா? கலியாண விருந்துக்கு அநேக நாட்களுக்கு முன்பாகவே அழைப்பு கொடுத்திருந்தாலும், அவர்களில் யாரையாவது கடவுளுடைய உதவியில்லாமல் நம்மால் வரவழைக்க முடியுமா? இரட்சிக்கப்பட்ட ஆத்துமாக்களின் இரட்சிப்புக்கு நாம் காரணமாயிருந்ததாக பெருமை கொள்ள இயலுமா? அது துணிகரம், அது தேவதூஷணம். அப்படிப்பட்ட பாவத்தை நாம் செய்யாமல் இருப்போமாக. நமது ஊழியம் வெற்றி அடைந்ததானால், அது சிறந்த ஊழியமாக இருந்ததானால் அதற்கு கடவுளின் கிருபையே காரணம்.கிறிஸ்துவின் நிமித்தமாக பாடுபடுதலும் ஒரு விசேஷித்த வெகுமதியாயிருக்கிறது. பிரியமானவர்களே, உங்களில் யாராவது கிறிஸ்துவுக்காக துன்பப்படுவதற்கு அழைக்கப்பட்டிருந்தால் அது மிகவும் விசேஷமானது. உங்களை யாராவது தூஷித்தார்களென்றால், உங்களுடைய அந்தஸ்த்தை இழந்தீர்களானால், கிறிஸ்துவுக்காக இரத்தசாட்சிகளாக மரிக்க நேர்ந்ததானால், "கிறிஸ்துவினிடத்தில் விசுவாசிப்பதற்கு மாத்திரமல்ல. அவர் நிமித்தமாகப் பாடுபடுகிறதற்கும் உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது" என்பதை நினைத்துக் கொள்ளுங்கள். களிகூறுங்கள். பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும். அவர்களுடைய பிதாக்கள் தீர்க்கதரிசிகளுக்கும் அப்படியே செய்தார்கள்". ஆனால், அதற்குரிய புகழ்ச்சியை நீங்கள் எடுத்துக் கொள்ளாதீர்கள். பாடுபடக்கூடிய அந்த நிலைமைக்கு நீங்கள் உயர்த்தப்பட்டீர்கள், உங்களை அந்நிலைக்குக் கொண்டுவந்தது உங்கள் ராஜாவாகிய கர்த்தர். பெரும் பாடுகளைக் கடந்து செல்லும்படியாக அவர் உங்களுக்கு அனுமதி கொடுத்திருக்கிறார். ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்திலே நீங்கள் உங்கள் வஸ்திரங்களைத் தோய்த்து வெளுத்தவர்களாயிருந்தால் அந்தப் பாடுகளெல்லாம் உங்களுக்கு ஒன்றுமேயில்லை. உங்களுடைய பொறுமை, தைரியம், உறுதி இவற்றுக்கெல்லாம் கடவுளின் ஆவியே காரணம். அவர் உங்களைக் கைவிட்டிருந்தாரானால், நீங்கள் மனுஷருக்கு பயந்து, விலகியோடி இருப்பீர்கள். அது உங்களுக்கு கண்ணியாயிருந்திருக்கும். சத்தியத்திற்கும் கர்த்தருக்கும் துரோகம் செய்திருப்பீர்கள். உண்மையாக நடக்க வேண்டியது உங்கள் கடமை. நீங்கள் உண்மையாக நடந்து கொள்ளும்போது, அது உங்களால் ஏற்படுவதல்ல. அவரே தம்முடைய கிரியையை நம்மில் நடப்பிக்கிறார். அதற்காக புகழப்படத்தக்கவரும் அவரே. அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள். இரட்சிப்பு நிறைவேற பிரயாசைப்படுங்கள்". முழு முயற்சியாக உழையுங்கள். அதில் எந்த குறைவும் வைக்காதீர்கள், "ஏனென்றால், தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி, விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார். *நீங்கள் உறுதிப்பட்டவர்களாயும் அசையாதவர்களாயும், கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருப்பீர்களாக. கடவுள் * உங்களுக்கு வெகுமதியளிப்பார். ஆனால் உங்களுடைய உறுதியும். சுறுசுறுப்பும். பொறுமையும் ஆகிய இவைகளெல்லாம் கடவுளின் கிருபையினால் உண்டான கிரியைகள். அது உங்களுக்கும் தெரியும். அவைகள் உங்களுக்கு இருந்ததானால். கடவுள்தான் அவை உருவானதற்குக் காரணம் என்று உணர்ந்து நன்றி செலுத்த வேண்டும்.


மேற்கூறிய கருத்துக்களை ஆவிக்குரிய மனிதர்கள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்க முடியாத வகையில் எடுத்துக்கூறி விட்டதாக நினைக்கிறேன். அதாவது, கடவுளுக்கு செய்கின்ற ஊழியத்தில் இலவசமான கிருபையே பிரதானமாக இருக்கின்றது.



Post a Comment

0 Comments