இன்றைய வசனம் :-மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள். ரோமர் 8:14

சார்லஸ் ஸ்பர்ஜனின் ஆவிக்குரிய குணங்கள்... CHARLES SPURGEON SPIRITUAL CHARACTERS

தேவ மனிதர் ஸ்பர்ஜனின் ஆவிக்குரிய பரிசுத்த குணாதிசயங்கள்


"எனது பரம எஜமானரின் சத்தியத்தை நான் இந்த ஜனங்களுக்கு கவலையீனமாக பிரசிங்கித்தாலோ அல்லது அதில் எந்த ஒரு பகுதியையாவது நான் மறைத்து வைத்து அறிவித்தாலோ நான் இந்த உலகத்தில் பிறவாதிருந்தால் எனக்கு நலமாயிருக்கும். தேவனுடைய வார்த்தையை நான் இந்த ஜனங்களுக்கு வேடிக்கை விளையாட்டாகப் பிரசிங்கித்து இந்த மக்களின் விலையேறப்பெற்ற ஆத்துமாக்களை நான் அழிப்பவனாக இருப்பேனானால் நான் ஒரு பிரசிங்கியாக இருப்பதைக் காட்டிலும் ஒரு பிசாசாக இருப்பது எனக்கு நலமாயிருக்கும். எல்லா மனிதரின் இரத்தப் பழிகளுக்கும் நான் நீங்கலாகி நான் எனது கரங்களை சுத்தமாகக் காத்துக் கொள்ளுவதே எனது ஆசைகளில் எல்லாம் உயர்ந்த ஆசையாகும். ஜியார்ஜ் பாக்ஸ் என்ற பரிசுத்தவான் தான் மரிக்கும்போது "நான் சுத்தமுள்ளவனாக இருக்கின்றேன், நான் சுத்தமுள்ளவனாக இருக்கின்றேன்" என்ற வார்த்தைகளுடன் மரித்ததுபோல நானும் என் முழு மனதார அந்த வார்த்தைகளுடன் மரிக்கவே கதறுகின்றேன்" என்றார் ஸ்பர்ஜன்.

இயேசு இரட்சகரே அவரின் வாழ்வின் உயிர்நாடியாக இருந்தார். 1855 ஆம் ஆண்டு தனது 20 ஆம் வயதில் எக்ஸ்டர் ஹால் என்ற இடத்தில் "நித்திய நாமம்" என்ற பொருளில் அவர் பிரசிங்கித்தபோது "கிறிஸ்து தேவனுடைய வல்லமையும், ஞானமுமானவர்" "உயர்த்தப்பட்ட கிறிஸ்து" "நம்முடைய பஸ்காவாம் கிறிஸ்து" "உடன்படிக்கையில் கிறிஸ்து" "உலகத்தின் பாவங்களை சுமந்து தீர்த்த கிறிஸ்து" என்றெல்லாம் பேசிவிட்டு தனது பிரசங்கத்தின் முடிவில் "ஸ்பர்ஜனின் நாமம் அழிந்து ஒளியட்டும், இயேசுவின் நாமம் என்றென்றைக்கும் நிலைத்திருக்கட்டும். இயேசு! இயேசு! இயேசு! எல்லாருக்கும் மா உன்னத கர்த்தராக அவரை முடிசூட்டுங்கள் என்று கூறிவிட்டு தனக்குப் பின்னாலுள்ள நாற்காலியில் மயங்கி விழுந்துவிட்டார்.

ஒவ்வொரு ஓய்வு நாளிலும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு தேவனுடைய வார்த்தைகளைப் பிரசிங்கித்த அவர் ஒரு மாபெரும் ஜெப மாந்தனாக இருந்தார். அடுத்து வரும் ஓய்வு நாளில் மக்களுக்கு தேவச் செய்தி கொடுப்பதற்காக சனிக்கிழமையே தேவனோடு போராடி அவரிடமிருந்து ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொள்ளுவதற்காக தனிமைக்குச் சென்றுவிடுவார். அவர் அங்கு எவ்விதமாகத் தன் ஆண்டவரோடு போராடினார் என்பதை எந்த ஒரு மனிதக் கண்களும் கண்டதே கிடையாது. நமது முற்பிதா யாக்கோபு, யாப்போக்கு ஆற்றங்கரையில் தன் கர்த்தரோடு போராடி ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொண்டது போல ஸ்பர்ஜனும் ஜெபத்தில் போராடி தேவனுடைய சமூகத்திலிருந்து அவர் கொண்டு வந்த செய்திகள் மூலமாக ஏராளம், ஏராளமான மக்கள் அன்பின் ஆண்டவருடைய இரட்சிப்பின் பாத்திரங்களாக மாற்றம் பெற்றனர். அப்படி அவர் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு ஒரு ஓய்வு நாளில் பிரசிங்கிப்பதை நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம்.

ஸ்பர்ஜனின் ஆண் மக்களான இரட்டையர்கள் (Twins) சார்லியும், தாமசும் பிரைட்டன் என்ற இடத்திலுள்ள பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது அவருடைய மகன்களில் ஒருவன் "அப்பா, நாங்கள் எங்கள் பள்ளியில் உள்ள எங்கள் வகுப்பு ஆசிரியரின் வரவேற்பு அறையில் நாங்கள் சில மாணவர்களாகக் கூடி ஜெபித்து வருகின்றோம்" என்று ஸ்பர்ஜனுக்கு எழுதியபோது அவர் தனது பதிலில் "உங்களுடைய பள்ளியில் ஜெப ஆவி அசைவாடுவதையும் அதில் நீங்கள் பங்கு பெறுவதையும் கேள்விப்படும் போது என் உள்ளம் ஆனந்த சந்தோசத்தால் பொங்குகின்றது. நீங்கள் ஆண்டவர் இயேசுவை அதிகமாக நேசிப்பதையும், நீங்கள் ஜெபமாந்தராக இருப்பதையும் அறிவதே எனது சந்தோசங்களுக்கெல்லாம் கிரீடமான சந்தோசமாகும். நீங்கள் ஆண்டவரை பிரசிங்கிக் வேண்டுமென்பதை நான் அதிகமாக விரும்புகின்றேன். ஆனால், ஜெபிப்பதே மிகவும் அருமையான காரியமாகும். ஜெபிக்காமல் பிரசிங்கித்த அநேக பிரசங்கிமார்கள் உதவாக்கரைகளாhகத் தேவனால் தள்ளப்பட்டுப் போனார்கள் என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ளும் அதே நேரத்தில் உத்தம இருதயத்தோடு ஜெபிக்கக் கற்றுக் கொண்டு பிரசிங்கித்த எந்த ஒரு தேவ ஊழியனும் தன் தேவனால் கனத்தையும், மகிமையையும் பெற்றுக் கொள்ளத் தவறியதில்லை என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது" என்று எழுதினார்.

ஸ்பர்ஜன் தன் ஆண்டவருடைய ஊழியத்தின் பாதையில் கடும் உழைப்பாளியாக விளங்கினார். "பகலுக்கு 12 மணி நேரம் உண்டு, அந்த 12 மணி நேரங்கள் நீங்கள் கர்த்தருக்காக வேலை செய்கின்றீர்களா?" என்று அவரை ஒரு கனம் பொருந்திய மனிதர் கேட்ட போது "நான் என் கர்த்தருக்காக நாள் ஒன்றுக்கு 18 மணி நேரம் பாடுபடுகின்றேன்" என்று ஸ்பர்ஜன் பதில் சொன்னார். ஆம், அவர் அப்படிப் பாடுபட்ட காரணத்தால்தான் ஏராளமான புத்தகங்களை அவரால் எழுத முடிந்தது. பல்லாயிரக்கணக்கான எழுப்புதல் பிரசங்கங்களை அவரால் பிரசிங்கிக்க முடிந்தது. அவரால் வாசித்து முடிக்கப்பட்ட ஆவிக்குரிய புஸ்தகங்கள் கணக்கில் அடங்காது. "மோட்ச பிரயாணம்" என்ற அதிசய புத்தகத்தை மட்டும் அவர் 100 தடவைகள் வாசித்து முடித்திருந்தார் என்றால் நமக்கு ஆச்சரியமாக இருக்கின்றதல்லவா? கர்த்தருடைய பரிசுத்த வேதாகமத்தை அவர் எத்தனை தடவைகள் வாசித்திருப்பாரோ நமக்குத் தெரியாது. ஆயிரக்கணக்கான அங்கத்தினர்களைக் கொண்ட தனது திருச்சபையின் ஆராதனை ஒழுங்குகள், சபை மக்களை சந்தித்தல் போன்ற காரியங்களுடன் அநாதை இல்லம், பாஸ்டர்கள் கல்லூரி காரியங்களை கவனித்தல் அத்துடன் அவருடைய மாதாந்திர ஆவிக்குரிய "பட்டயமும், மண் வெட்டியும்" என்ற பத்திரிக்கைக்கு செய்திகள் எழுதி தயாரித்து அதை அச்சிட்டு வெளியிடுதல் போன்ற அநேக காரியங்களை எல்லாம் அவரே கவனித்தார். தனது உதவிக்காக ஆட்களை அவர் வைத்திருந்த போதினும் அவர்கள் அனைவருக்கும் மேலாக அவரே அதின் பிரதான பாத்திரமாக விளங்கினார். அநேக மெய்யான பரிசுத்த தேவ ஊழியர்களை பயிற்றுவித்து உருவாக்கிய அவரது பாஸ்டர்கள் இறையியல் கல்லூரியையும் நீங்கள் இந்தச் செய்தியில் காண்பீர்கள்.

ஸ்பர்ஜன் மிகவும் சிறுவனாக 17 வயதினனாக இருந்த போதிருந்தே வாட்டர்பீச் என்ற இடத்திலிருந்த சிறிய ஆலயத்தின் குருவானவராகி பின் நாட்களில் உலகப் புகழ் பெற்ற பிரசங்கியானார். அவருடைய பிரசங்க வல்லமை உலகமெங்கும் கொடி கட்டிப் பறந்தது. நிகழ்ச்சிகளை உண்மையாக தத்ரூபமாக மக்களுக்கு முன்பாக காண்பிக்கும் ஆற்றல், பொருத்தமான உவமானங்களையும், சம்பவங்களையும் பிரசங்கங்களில் புகுத்துகின்ற கிருபை, மா சிறந்த வேத அறிவு, சிறந்த பேச்சுத் திறமை, அபிநயத்துடன் சைகை காட்டி பிரசிங்கிக்கும் மேலான ஆற்றல் எல்லாம் அவரிடமிருந்தது. அவர் ஒரு பிரசங்க வேந்தராக விளங்கினார். இத்தனை தேவ கிருபைகள் அவருக்கு இருந்தபோதினும் அதைக் கொண்டு ஒரு சிறிய பெருமை கூட அவர் கொண்டதில்லை. தேவ மக்கள் அவரைத் தங்கள் தலைமேல் வைத்து துதி பாடினபோதினும் அதை எல்லாம் அவர் கண்டு கொள்ளவே இல்லை. ஸ்பர்ஜன் மிகவும் மனத்தாழ்மையுடையோனாய் தன்னுடைய ஆண்டவர் சொன்னது போல "நான் சாந்தமும் மனத்தாழ்மையும் உடையவனாயிருக்கிறேன்" என்ற வார்த்தையின்படி சாந்தமுடையவராகவும், கிறிஸ்வின் சாயலைத் தரித்தவராகவும் காணப்பட்டார். அவரைக் குறித்துப் பேசப்படும் துதி பாடும் வார்த்தைகளை அவர் ஏற்றுக்கொள்ளவே மாட்டார். அதற்காக அவர் வேதனைப்படுவார். அவரது வாழ்வின் வாசகம் "இனி நான் அல்ல, கிறிஸ்துவே" என்பதாக இருந்தது. அவரது கறைதிரையற்ற பரிசுத்த வாழ்க்கை, அவரது ஞானமுள்ள தேவ ஆலோசனைகள், மக்களை மகிழ்விக்கும் குண நலன், மரணமே வந்தாலும் அஞ்சாமல் தேவ மக்களின் பாடு துன்பங்கள், சாவு நோவு துக்கங்களில் கலந்து கொள்ளும் அவரது கல்வாரி அன்பு, தாராளமான ஈகை மனப்பான்மை, தேவனுடைய சத்தியத்தை திட்டவட்டமாக ஒளிவு மறைவின்றி தைரிய நெஞ்சினனாகப் பிரசிங்கித்தல் போன்ற மேலான ஒழுக்கசீலங்கள் எல்லாம் அவரில் நிறைந்து காணப்பட்டன.

தேவனுடைய பண விசயங்களில் மிகவும் உண்மையுடையோனாய் அவர் இருந்தார். கர்த்தருடைய ஊழியங்களுக்காக வரும் பணங்களில் தனக்கு வீடு வாசல்களைக் கட்டி, தனக்கு ஜெய ஸ்தம்பத்தை நாட்டி, தனது பின் சந்ததிக்கு ஆஸ்தி ஐசுவரியங்களை அவர் விட்டுச் செல்லவில்லை. அவரது கிறிஸ்தவ பரிசுத்த வாழ்க்கை ஒளிவு மறைவின்றி அனைவரும் கண்ணாடியில் திறந்த முகமாய் பார்க்கும் வண்ணமாக இருந்தது. அவர் அநாதைகளுக்காக ஒரு அநாதை இல்லம் ஆரம்பிக்கப் போவதாக அறிவித்த உடன்தானே ஒரு அன்பான தாயார் 20000 பவுண்டுகளை உடனே அவருக்குக் கொடுத்தார்கள். இந்த நாட்களில் அந்த தொகை ஒரு கோடிக்கும் அதிகமான மதிப்பிலான ஒரு பெருந்தொகையாகும். தேவ மனிதரின் உண்மையும், உத்தமமும் மக்களை அத்தனை நம்பிக்கையுடன் அவருக்குக் கொடுக்க வைத்தது.

அப்போஸ்தலனாகிய பரிசுத்த பவுல் அடிகளாருக்குப் பின்னர் தேவ மனிதர் சார்லஸ் ஹட்டன் ஸ்பர்ஜனையே தேவன் அத்தனை வல்லமையாகப் பயன்படுத்தியிருக்கின்றார் என்று சொல்லப்படுகின்றது. அந்த பரிசுத்த தேவ மனிதர் தனது இரட்டைக் குமாரர்களில் ஒரு மகனுக்கு எழுதின கடிதத்தின் சில வரிகளோடு தேவ மனிதரின் வாழ்க்கைச் சரித்திரத்தை முடிக்கின்றேன்.

"எனக்கு அன்பான எனது சொந்த மகனே, உனது அன்பின் ஆண்டவர் இயேசுவுக்காக நீ செய்ய நினைத்திருக்கும் காரியத்துக்காக நான் மிகவும் சந்தோசம் அடைகின்றேன். உண்மையாகவே நீ அதைச் செய்யும்போது எனது உள்ளம் இன்னும் அதிகமான சந்தோசத்துக்குள்ளாகும். காலங்கள் விரைந்தோடிக் கொண்டிருக்கின்றது. அத்துடன் பொன்னான சந்தர்ப்பங்களும், வாய்ப்புகளும் பறந்தோடிச் சென்று கொண்டிருக்கின்றது. வரும் காலங்களில் நீ எத்தனை ஜாக்கிரதையும் விழிப்புமாக காரியங்களைச் செய்தாலும் 1875 ஆம் ஆண்டில் செய்யக்கூடிய காரியங்களை 1875 ஆம் ஆண்டிலேயேதான் செய்தாக வேண்டும். அந்த ஆண்டில் செய்யாமல் விட்டுவிட்டதை எக்காலத்தும், நித்தியத்தின் முழுமையிலும் உன்னால் செய்யவே முடியாது. உனது தனிப்பட்ட வாழ்வின் பரிசுத்தத்திற்காக நீ அதிகமான கவனம் செலுத்த வேண்டும். இரட்சகர் இயேசுவின் விலையேறப்பெற்ற இரத்தத்தால் மீட்கப்பட்ட நீ அவருக்கே சொந்தமாவாய். தேவனுடைய ராஜ்யத்தை இந்த உலகத்தில் பரவச்செய்வதின் மூலமாகவும், அவர் ஆசீர்வதிக்க விரும்பும் பாவ மாந்தரை அவரண்டை கூட்டிக் கொண்டு வருவதன் மூலமும் உனது அன்பை நேரடியாக நீ அவருக்குக் காண்பிக்கலாம். ஒரு தடவை இந்த பரிசுத்த முயற்சிகள் உன்னில் தொடங்கிவிட்டால் அது உனக்கு மிகவும் இலகு ஆகிவிடுவதுடன் அதைத் தொடர்ந்து செய்ய வேண்டுமென்ற பசிதாகமும் உன்னில் அதிகரித்துவிடும். அது ஒரு கடினமான வேலையல்ல, அது ஒரு ஆனந்த மகிழ்ச்சியாகும். "உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ அதை உன் முழு பெலத்தோடு செய்" உனது ஜெப வாழ்க்கையில் நீ களிகூருவதாக எழுதியிருந்தாய். அது எனக்கு சொல்லொண்ணா மகிழ்ச்சியைக் கொடுக்கின்றது. அந்த ஜெப வாழ்வில்தான் நீ வரும் நாட்களில் அதிகம் அதிகமாகக் களிகூர வேண்டும். அந்த ஜெப வாழ்க்கையைப் போல உனது கிறிஸ்தவ வாழ்க்கையில் உனக்கு வல்லமையைக் கொடுப்பதும், வழிக்குத் தேவையான ஒளியைக் கொடுப்பதுவும் வேறு எதுவுமே கிடையாது. தேவனுடைய சேனை வீரர்களில் நான் உன்னை எப்பொழுதும் தலைவனாகக் காண விரும்புகின்றேன். அது எப்படியாகுமென்று எனக்குத் தெரியவில்லை. இருப்பினும் அப்படி நீ இருக்க வேண்டுமென்பதே நான் உனக்காக தொடர்ந்து செய்யும் எனது கண்ணீரின் மன்றாட்டாகும்". உனது அன்புள்ள தந்தை ஸ்பர்ஜன்.

Post a Comment

0 Comments